பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

149

கோயில் தெற்கே பார்த்த கோயில். கோயிலுக்கு முன் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதை நெல்லியடி தேவதீர்த்தம் என்கிறார்கள். குளம் வெட்டிய காலத்தில் அதன் கரையில் நெல்லி மரங்கள் இருந்திருக்க வேண்டும். இந்த தேவ தீர்த்தத்தின் கரையிலே வல்லப கணபதி கிழக்கு நோக்கியிருக்கிறார். இவர் ஐந்து கரத்தனாக இல்லை பதினோரு கரத்தனாக இருக்கும் இவரை வணங்கிய பின் கோயிலின் பெரிய மண்டபத்துக்கு வந்து சேரலாம். இதனையே கோயில் நிர்வாகிகள் ஆயிரக்கால் மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தின் முகப்பில் ஏழு தூண்களிலும் ஏழு சிற்ப வடிவங்கள். உக்கிர நரசிம்மர், ஊர்த்துவதாண்டவர், ஆலங்காட்டுக் காளி, பிக்ஷாடனர் முதலியவர்கள். இன்னும் இந்த மண்டபத்தின் உள்ளே வில்லேந்திய வேலன், சங்கரநாராயணர், ரிஷபாந்திகர் எல்லாம். மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். அளவிலும் காத்திரத்திலும் கம்பீரத்திலும் சிறந்தவையாகச் சிற்பவடிவங்கள் இருக்கின்றன.

இந்த மண்டபத்தைக் கடந்து உள் நுழைந்தால் இரண்டு வீரபத்திரர் உருவங்களையும் பார்க்கலாம். இத்தலத்தில் உள்ள சிவயோக நாயகி, தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். அவளது தவத்தைக் காப்பதற்கு இறைவன் வீரபத்திரனை உருவாக்கினார் என்பது புராணக்கதை. இந்த வீரபத்திரன் அம்பிகை கோயிலிலும் இருக்கிறான். என்றாலும் சந்நிதி வாயிலிலுமே ஒருவருக்கு இருவராக இருந்து காவல் புரிகின்றனர். இந்த வீரபத்திரர்களை வணங்கியபின் நாம் வந்து சேருவது மாணிக்கவாசகரது சந்நிதிக்கு. இச் சந்நிதியைக் கடந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்லவேணும். அப்படிச் கடந்து வெளிப்பிரகாரத்துக்கு வந்தால் அங்கு வெயில் உவந்த விநாயகர் நம்மை வரவேற்பார். அவருக்குக் கோயில் இல்லை. அவர்தான் எப்பொழுதுமே 'சன் பாத்' எடுக்கிறவர் ஆயிற்றே. எப்போதுமே