பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வேங்கடம் முதல் குமரி வரை

வெயிலிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து நல்ல திட சரீரியாக வாழ்கிறார். இவரையே, 'நிலவு வந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிறு' என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிப் பரவியிருக்கிறார்கள். இவரையும் வணங்கி விட்டே பிரசித்தி பெற்ற தியாகராஜ மண்டபத்துக்குச் செல்ல வேணும்.

இங்குதான் மாணிக்கவாசர் இரண்டு திருக்கோலங்களில் சிலை உருவில் இருக்கிறார். ஒன்று மந்திரியின் கோலம். அந்தக் கோலத்தில்தானே அவர் இங்கு முதல் முதல் வந்திருக்கிறார். மன்னனுக்கு உரிய கிரீடம் கூட அவர் தலையை அலங்கரிக்கிறது. காதிலே குண்டலங்கள், மார்பிலே ஆரம், கைகளிலே அணிகள் எல்லாம் அணிந்து கம்பீரமாக நிற்கிறார். இதற்கு எதிர்ப்புறமோ, அவரது துறவுக்கோலம். எல்லா அணிகளையும் பணிகளையும் உதறி விட்டுக் கூப்பிய கையராய் நிற்கிறார். இந்த வடிவில்தானே இறைவன் திருவடியில் நிலைத்துநின்றிருக்கிறார் அவர்.

இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்ப உலகில் பிரசித்தமானவை. கல்லைத் தகடாக்கி அதில் பல வளைவுகள் கொடுத்துக் கூரை வேய்ந்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலே கோயில் கட்ட 'எக்ரிமெண்டு' எழுதிக் கொடுக்கும் சிற்பிகள், 'தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழிப் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை' ஆகியவற்றைத் தவிர மற்ற வேலைப்பாடுகளுக்குக்குறையாமல் செய்து தருகிறோம்' என்று எழுதிக் கொடுப்பார்களாம். கொடுங்கை வேலை அத்தனை 'அற்புதமானது, அழகானது. இந்த மண்டபத்துக்கு வட மேற்கிலேதான் தல விருட்சமாகிய குருந்த மரம் நிற்கிறது. இந்த மரத்தடியிலேதான் இறைவன் எழுந்தருளி வாதவூரரை ஆட்கொண்டிருக்கிறார் இதனை அந்த மணிவாசகரே சொல்கிறாரே.

நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்த மேவியசீர்