பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17. மன்னார்குடி ராஜகோபாலன்

'கலையை வளர்ப்பது குழந்தையுள்ளம்தான். சீற்றமும் அழுக்காறும் துயரமும் குடிகொண்ட மனிதனது நெஞ்சிலே கலை தோன்றாது. அது கலையை அழிக்கும்; ஆக்காது' என்று ஓர் அறிஞர் கூறுகிறார். இந்த உண்மையை எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் முருகனையும் கண்ணனையும் குழந்தையாகப் பாவனை பண்ணியே வழிபட்டிருக்கிறார்கள். விரிந்த உலகங்கள் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் பெரிய மாயவனாகிய திருமாலைப் பச்சிளங் குழந்தையாம் கண்ணனாகக் கொண்டாடுவதிலே ஓர் இன்பம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கண்ணனிடத்து ஈடுபட்டு நிற்கும் அடியவர்களிடத்தில் பெரியாழ்வார் தலைசிறந்து விளங்குகிறார். வடமதுரைச் சிறைக்கூடத்திலே தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் கோகுலத்திலே யசோதையின் பிள்ளையாக வளர்கிறான், 'மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி ஆனிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்' இட்டு அன்னை யசோதை தாலாட்டுகிறாள். இந்த யசோதையாகவே மாறுகிறார் பெரியாழ்வார் கண்ணனை அனுபவிப்பதிலே.