பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வேங்கடம் முதல் குமரி வரை

‘வாய்த்த புகழ் மணிவண்ணா! மஞ்சனம் ஆட நீ வாராய்! என்று அழகொழுக அவனை அழைக்கிறார். இன்னும் பூச்சூட்டக் கண்ணனை அழைக்கும் அருமைதான் என்ன?

ஆநீரை மேய்க்க நீ போதி!

அருமருந்து ஆவது அறியாய்

கானகமெல்லாம் திரிந்து உன்

கரிய திருமேனி வாட,

பானையில் பாலைப் பருகிப்

பற்றாதார் எல்லாம் சிரிப்ப,

தேனில் இனிய பிரானே!

செண்பகப் பூச் சூட்டவாராய்

என்றல்லவா அழைக்கிறார். இப்படியே அவனுக்குக்காப்பிட, கோல் எழுத, முலையூட்ட எல்லாம் அழைக்கும் பாடல்கள் அனந்தம். இன்னும் அவன் கன்றுகளை மேய்த்து வருவதையும், குழல் ஊதி நிற்பதையும், அக்குழல் ஓசைகேட்டுப் பறவையும் கறவையும் தன் வயமிழந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பதையும் அவர் கூறும்போது நாமும் அந்தக் கண்ணனிடத்திலே அப்படியே ஈடுபட்டு நிற்கிறோம். இந்தக் கண்ணனாம் கோபாலனது திருவிளையாடல்களும் ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்திரண்டு என்று வகைப்படுத்தி அத்தனைக்கும் விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நமது முன்னோர். இந்தக் கிருஷ்ணாவதார லீலைகளை யெல்லாம் காட்டி அருளிய தலம்தான் ராஜகோபாலன் கோவில் கொண்டிருக்கும் ராஜ மன்னார் குடி. அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தஞ்சை ஜில்லாவிலே, மன்னார்குடித் தாலுகாவில் தலைநகராய் இருப்பதுதான் ராஜமன்னார்குடி. தஞ்சை திருவாரூர் ரயில் பாதையில் நீடாமங்கலம் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு ரயில் மாற்றி மன்னார்குடிக்குச் செல்லலாம். இப்படியெல்லாம் ரயில் ஏறவும் இறங்கவும் வேண்டாம்