பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

155

என்று நினைத்தால், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் முதலிய எந்த ஊரில் இருந்தும் பஸ்ஸில் இவ்வூர் போய்ச் சேரலாம். இல்லை என்றால் கார் வசதி செய்து ‘ஜாம் ஜாம்' என்றுகோயில் வாயிலிலேயே போய் இறங்கலாம். ஏதோ யமுனா தீர விஹாரியாக இருந்த இந்த ராஜகோபாலன், ஏன் இத்தனை தூரம் தெற்கு நோக்கி வந்து இங்கு தங்கியிருக்கிறான் என்ற அறிய விரும்பினால் அந்தத் தல வரலாற்றை ஒரு திருப்புத் திருப்ப வேணும். -

இத்தென் தமிழ் நாட்டிலே காவிரிக்குத் தெற்கே இரண்டு யோசனை தூரத்திலே சண்பக மரங்கள் அடர்ந்த சண்பகக் காடு ஒன்று இருந்திருக்கிறது. அங்கு முனிவர் பலர் இருந்து தவம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வாஹிமுகர்: அவருக்கு இரண்டு பிள்ளைகள் கோப்பிரளயர், கோபிலர் என்று. இருவரும் தங்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் வேண்டித் துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானை நோக்கித் தவம் புரிகிறார்கள். இவர்களை நாரதர் சந்திக்கிறார். இவர்களிடம் 'துவாரகையிலுள்ள கிருஷ்ணன்தான் தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு வைகுண்டத்துக்கே திரும்பப் போய்விட்டனே; அவனை நோக்கி இங்கு தவம் புரிவானேன்?' என்று சொல்கிறார். பின் கிருஷ்ண சாக்ஷாத்காரம் பெற, காவிரியின் கிளை நதியான ஹரித்திரா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்கிறார். அப்படியே அவர்கள் தவம் செய்கிறார்கள்.

தவத்துக்கு இரங்கி, பரந்தாமன் எழுந்தருளுகிறான். அவர்கள் விரும்பியவிதமே அன்று கண்ணனாகப் பிருந்தாவனத்தில் திரிந்த கோலத்தையும் அங்கு அப்போது செய்த லீலைகளையும் மறுபடியும் இவர்களுக்காகச் செய்து காட்ட இசைகிறான். அப்படியே கோபாலன் தனது திருவிளையாடல் முப்பத்திரண்டையும் செய்து காட்டிய தலம்தான் தக்ஷிண துவாரகை என்னும் இந்த மன்னார்குடி.