பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

3

பெருமை. ஆனால் பக்த கோடிகளிடையே அது கோவில்கள் நிறைந்த ஊர் என்றுதான் பிரசித்தம். தமிழ் நாட்டில் தெய்வ மணம் கமழும் திருநகராக இருப்பது காஞ்சி. அதற்கு அடுத்த ஸ்தானம் வகிப்பது கும்பகோணம் என்னும் குடந்தையே, ஆனால் காஞ்சியைப் போல் இங்கு சிவனும் விஷ்ணுவும் ஊரைப் பங்கு போட்டுக் கொள்ளவில்லை. எல்லோரும் அடுத்து அடுத்தே வாழ்கிறார்கள்.

ஊருக்கு நடுவில் சாரங்கபாணி என்றால் அவரைச் சுற்றியே கும்பேசுரர், சோமேசுரர் எல்லாம். இவர்கள் தவிர சக்ரபாணி, கோதண்டராமர் வேறே. இன்னும் குடந்தைக் கீழ்க்கோட்டனார், குடந்தை காரோணத்தார் வேறே. மேலும் வீதிக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு கோபுரம் என்று ஊர் முழுவதும் கோயில்களாக நிரம்பிக் கிடக்கும் தலம் அது. இந்தத் தலத்தையும் இங்குள்ள மூர்த்திகளையும் விடப் பிரபலமானது அங்குள்ள தீர்த்தம். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருதரம் இந்தக் கும்பகோணத்தில் நடக்கும் மகா மகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அங்குள்ள மகாமகக் குளத்தைப் பார்த்தும் இருப்பீர்கள். இந்த மகாமகத் தீர்த்தம் எப்படி ஏற்பட்டது என்று முதலில் தெரிந்துகொள்ளலாமே.

மாசி மாதத்தில் மக நட்சத்திரம் விசேஷமானது. அதிலும் குரு சிம்ம ராசியில் இருக்கும் காலம் மிக மிக விசேஷமானது. அப்படி வருவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே. அந்த மகாமக தினத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நருமதை, சிந்து, காவேரி, வேகவதி என்னும் ஒன்பது நதிகளுமே இங்கு கூடுகின்றன. பாவதாரிகளான மக்கள் எல்லாம் இந்நதிகளிலே தனித் தனியாக மூழ்கித் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ள, அந்த மக்கள் பாவங்களையெல்லாம் ஏற்பது காரணமாக இந்த நவகன்னியருமே பாபகாரிகளாக மாறுகின்றனர். சிவபெருமானை வணங்கி இந்தப் பாபங்களைப் போக்கிக்