பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வேங்கடம் முதல் குமரி வரை

மொழியின் பத்தாம் பாட்டை இந்த ராஜ கோபாலனுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். பாடல் இதுதான்.

உன்னித்து மற்றொரு தெய்வம்
தொழாள், அவனையல்லால்
நும் இச்சை கொல்லிநும் தோள்
குலைக்கப்படும், அன்னைமீர்
மன்னப்படு பறைவாணனை
வண் துவாரபதி மன்னனை ஏத்துமின்
ஏத்துதலும் தொழுது ஆடுமே.

என்பது நம்மாழ்வார் பாசுரம். முன்னமேயே இத்தலம் தக்ஷிண துவாரகை என்று வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்திருக்கிறோம். அந்தத் தென் துவாரகையையே வளப்பமுள்ள துவாரகை - வண் துவாரகை என்று நம்மாழ்வார் குறித்தார் போலும்.

புராண ரீதியில் இக்கோயிலைச் சௌராஷ்டிதேசத்து அரசன் ராஜசேகரன் கட்டிப் பல கைங்கர்யங்கள் செய்தான் என்று தெரிகிறோம். யக்ஞசீலன் என்ற அந்தணனை அவமதித்தது காரணமாக அந்த ராஜசேகரன் பைத்தியம் பிடித்து அலைய அவன் இத்தலத்துக்கு வந்து ராஜ கோபாலனைச் சேவித்துப் பைத்தியம் நீங்கினான் என்பது புராணக் கதை, சரித்திர பூர்வமாக ஆராய்ந்தால் இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியும். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் குலோத்துங்கன் காலத்தியது இரண்டு, மற்றவை திரிபுவன சக்ரவர்த்தி ராஜராஜதேவர், ராஜ ராஜேந்திர சோழ தேவர், கோனேரின்மை கொண்டான் காலத்தியவை. முதற் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டின்படி இக்கோயில் அவனது 43-ஆம் ஆண்டில் அதாவது கி.பி. 1113-ல் விஸ்தரிக்கப்பட்டிருக்கவேண்டும்.