பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

161

ராஜாதி சதுர்வேதிமங்கலம், குலோத்துங்க சோழவிண்ணகரம் என்றெல்லாம் இத்தலம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தஞ்சை நாயக்க மன்னரில் ஒருவரான விஜயராகவன் இக்கோயிலின் பெரும்பகுதியைக் கட்டியிருக்கிறான். அவனது சிலைவடிவம் மகா மண்டபத்தில் இருக்கிறது.

இந்தக்கோயிலை மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பி விட்டால், தலம் முழுவதையும் பற்றித் தெரிந்ததாக ஆகாது. இங்குள்ள முக்கிய தீர்த்தம் ஹரித்திரா நதி என்னும் பெரிய தெப்பக்குளம்தான். இத் திருக்குளத்தின் விஸ்தீரணம் இருபத்து மூன்று ஏக்கர். திருவாரூர் கமலாலயத்தை விடச் சிறியதுதான் என்றாலும் நல்ல புராணப் பிரசித்தி உடையது. இங்குதான் ராஜகோபாலன் கோபிகைகளோடு ஜலக்கிரீடை செய்திருக்கிறான். இந்தக் குளத்தின் மத்தியில் ஒரு மண்டபம் அல்ல, மதிலுடன் கூடிய ஒரு சிறு கோயிலே இருக்கிறது. அக்கோயிலினுள் வேணுகோபாலன், ருக்மிணி சத்யபாமா சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். வசதி செய்து கொள்ளக் கூடுமானால் இவர்களையும் தரிசித்துவிட்டே திரும்பலாம்.