பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18. வடுவூர் கோதண்டராமன்

ரயு நதிக் கரையிலே பிறந்து கங்கை நதி தீரத்திலே வளர்ந்தவன் ராமன். ஆனால் இன்று இந்தச் சரயு நதிக்கரையிலோ அல்லது கங்கை நதி தீரத்திலோ ராமனுக்குக் கோயில்கள் அதிகம் இல்லை. இந்திய நாட்டின் தலநகரம் டில்லியிலேயே பெரிய கோயில் லக்ஷ்மி நாராயணனுக்குத் தான். நான் அங்கு சென்றிருந்தபோது, 'ராமனுக்குக் கோயில்கள் உண்டா ?' என்று தேடிந்திரிந்தேன். 'ஓ! உண்டே அந்த ஜந்தர்மந்தர் பக்கம் இறங்கி அங்கிருந்து கிழக்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் ராமன் கோயிலுக்குச் செல்லலாமே' என்று விவரம் அறிந்த நண்பர் ஒருவர் கூறினார். அப்படியே நடந்தேன்.

ஆனால் அங்கு சென்று கண்டது ராமன் கோயில் இல்லை. அங்கே அனுமனுக்கு என்று ஒரு பெரிய கோயிலைக் கட்டி அதில் பெரியதோர் அனுமாரையும் பிரதிஷ்டை செய்து விட்டு, ஓர் ஒதுக்குப் புறமான மாடத்தில் ராமனுக்கும் சீதைக்கும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தக் கங்கா யமுனை நதி தீரத்தைக் கடந்து, கோதாவரிக் கரைக்கு வந்தால் அங்கு பத்ராஜலத்தில் ஒரு கோயில், ஆம்! அந்தப் பழைய ராம பக்தன் ராம்தாஸ் கட்டிய கோவில்