பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

165

சென்று சேரலாம். இதைத் தண்டகாரண்ய க்ஷேத்திரம் என்று கூறுகிறது தல வரலாறு. நாம் அறிந்த மட்டில் தண்டகாரண்யம் என்பது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசம்தான். 'காவிரி பாயும் சோழவளநாட்டிலா ஒரு தண்டகாரண்யம்?' என்று அதிசயிப்போம். நமக்குத்தான் தெரியுமே, 'ராமன் இருக்குமிடம் அயோத்தி' என்று. அதுபோல் ராமன் சீதா லக்ஷ்மண சமேதனாக இருக்கும் இடம் பஞ்சவடி. அந்தப் பஞ்சவடியை உள்ளடக்கியது தண்டகாரண்யம், ஆதலால் ராமன் சீதா லக்ஷ்மணருடன் தங்கியிருக்கும் இந்த இடத்தையும் தண்டகாரண்யம் என்று சொல்வதில் தவறில்லையல்லவா? ஆதலால் அந்தத் தண்டகாரண்ய க்ஷேத்திரத்துக்கே செல்லலாம்.

இந்த வட்டாரத்தை அங்குள்ள பழங் குடியினரான கள்ளர்குல மக்கள் 'தன்னரசு நாடு' என்கிறார்கள். அவர்களெல்லாம் தத்தமக்குத் தோன்றியபடி அன்று தனி அரசு செய்த நாடாக இருக்கும் போலும். ஆனால் இந்த நாட்டில் இந்த ராமன் வந்து கோயில் கொண்டபின், நல்ல குடியரசு நாடாகவே மாறியிருக்கிறது. ஊரில் ஒரு பஞ்சாய்த்து இருக்கிறது. கோயிலுக்கு ஓர் அறம் காவலர் குழு இருக்கிறது. தன்னரசு எல்லாம் மலை ஏறி நல்ல குடியரசாக ராமராஜ்யமாக மாறியிருக்கிறது.

வடுவூர் கோயில்

வே.ம.கு.வ - 12