பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த ஊரின் மேல்புறத்திலே ஒரு கோயில். அக்கோயில் மிகப் பெரிய கோயிலும் அல்ல, மிகச் சின்னக்கோயிலும் அல்ல. கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. அதைக் கடந்ததும் வெளிப் பிரகாரம். அதை அடுத்து ஒரு மண்டபம், அந்த மண்டபத்தை அடுத்துகி கருவறை. கருவறையிலே ராமன், சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கிறான் சிலை உருவில், இவர்களை முந்திக் கொண்டு செப்பு வடிவமாக நிற்பவர்களே மிக்க அழகு வாய்ந்தவர்கள். அப்படி நிற்பவனே கோதரண்டராமன். அவனது பக்கத்திலே அஞ்சலி ஹஸ்தனாய் அனுமனும் நிற்கிறான். பட்டாச்சாரியரை அழைத்துத் தூபம் இட்டு நல்ல வெளிச்சத்தில் ராமனைச் தரிசித்து அனுப்விப்பது அவனது உதடுகளில் தவழும் புன்முறுவலையே. அன்று கன்னி மாடத்திலிருந்து சீதை, மிதிலா நகரின் தெருவிலே முனிவர் முன் செல்லத் தம்பி பின்வரச் சென்ற ராமனைக் கண்டபோதும் அவள் கண்டது அந்த முறுவலைத்தானே.

இந்திர நீலம் ஒத்து
இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும்
தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத்
தோளுமே அல,
முந்தி என் உயிரை
அம் முறுவல் உண்டதே

என்றுதானே அவள் சொல்லுகிறாள். நாமும் அவளைப் போலவே அவனது சந்திரவதனத்தைக் காணலாம். புன்முறுவலை அனுபவிக்கலாம். இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியையோ, தாழ்ந்த கைகளையோ, சுந்தர மணிவரைத் தோள்களையோ காண்பது இயலாது. காரணம் அத்தனையையும் நீண்டுயர்ந்த கிரீடமும், தங்கக் கவசமும் அணிவித்து மறைத்து வைத்திருப்பார்கள்.