பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

167

சாதாரணமாகக் கவசம் களைதல் என்பது இங்கு இல்லை. வருஷத்துக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் அபிஷேகம் நடத்துகிறார்கள். அன்று கருவறையில் உள்ள இந்தச் செப்புச் சிலை ராமனை, லக்ஷ்மணனை. சீதையை வெளியே கொணர்கிறார்கள்; திருமஞ்சனம் ஆட்டுகிறார்கள். அதன் பின் சந்தனக் காப்புச் செய்கிறார்கள். அந்தச் சந்தனக் காப்போடு காப்பாகக் கவசத்தையுமே போட்டு 'பாக்' பண்ணி வைத்து விடுகிறார்கள். மறுபடியும் கவசம் களைவது அடுத்த அபிஷேகக் காலத்தில்தான்.

இந்த ராமன் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. இத்தலத்தில் முதன் முதல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தவன். ருக்மிணி சத்யபாமையுடன் கூடிய ராஜகோபாலனே. திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ள தலைஞாயிறு என்ற இடத்திலேயே ஒரு சிறு கோயிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை வடிவங்கள் இருந்திருக்கின்றன. அப்போது தஞ்சையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர் இந்த ராமனை வடுவூருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். முதலில் ராமனையும் சீதையையும் எடுத்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குள் தலைஞாயிறு மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மணனை எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆதலால் அங்கிருந்து வந்த ராமன் சீதை வடிவங்களோடு லக்ஷ்மணனையும் புதிதாக வடித்துச் சேர்த்திருக்கிறார்கள் இங்கே.

ராஜகோபாலன் அவதாரத்துக்கு முந்திய அவதாரம் அல்லவா ராமாவதாரம்? ஆதலால் முன்னர் அங்கிருந்த ராஜகோபாலன், ராமருக்குக் கருவறையிலேயே இடம் கொடுத்துவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறான். இன்று ராஜகோபாலன் தம்பதிகள், நம்மாழ்வார், உடையவர், தேசிகர், மணவாள மாமுனிகள் எல்லாம் ஓர் இருட்டறைக்குள்ளே ஒதுங்கியிருக்கிறார்கள். அர்ச்சகரைக் கேட்டு அவர்களையுமே தரிசிக்கலாம். தலை ஞாயிற்றிலுள்ள