பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

177

என்று அந்தக் குடத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த விமானத்தில் அந்தப் பிரமாந்திரத் தளக்கல்லின் மேலே மூலைக்கு இரண்டு நந்தியாக எட்டு நந்திகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நந்தியின் காத்திரம் என்ன என்று தெரியவேண்டுமானால், கோயிலுக்குத் தென்புறம் உள்ள வெளிப் பிரகாரத்தை அடுத்துள்ள இடத்தில் வைத்திருக்கும் நந்தியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இன்னும் இந்த விமானத்தில் உள்ள சிற்ப வடிவங்களை யெல்லாம் ஜாபிதா போட்டுச் சொல்லி விட முடியாது. நேரிலே சென்றுதான் பார்க்கவேணும். இனி கோயிலின் திறந்த வெளி முற்றத்தைக் கடக்கலாம். அங்குள்ள சரபேந்திர பூபாலக் குறவஞ்சி மேடையையும் பார்க்கலாம்.

அதன் பின் சில படிகள் ஏறிப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய நந்தியைப் பார்க்கலாம். 12 அடி உயரம், 20 அடி நீம், 8 அடி அகலம், 25 டன் நிறை என்று கணக்கிட்டிருக்கிறார்கள் இதனை. எனக்குள்ள ஆச்சரியமெல்லாம் இத்தனை பெரிய நந்தியைச் செய்ய ஒரே கல் எப்படிக் கிடைத்தது இவர்களுக்கு என்பதுதான். இனி ‘விறு விறு' என்று நடந்து படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லலாம். மகா மண்டபத்தின் வாயிலில் பதினெட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் நிற்பார்கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து கருவறைக்கு வந்தால் இன்னும் பெரிய வியப்பு. 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் பேரில் 23 அடி உயரமுள்ள லிங்கத் திருவுரு கம்பீரமாக இருக்கும். அபிஷேகம், ஆடை, மாலை அணிவித்தல் எல்லாம் பக்கத்தில் அமைத்திருக்கும் படிகள் வழியாக ஏறித்தான் செய்யவேண்டும். இந்த லிங்கம் அமைக்கக் கல், நருமதை நதிக்கரையில் இருந்தே வந்திருக்கிறது. பாணத்தை ஆவுடையாரில் பொருத்தக் கருவூரார் வந்திருக்கிறார்.

பெரு உடையார், பிரஹதீசுவரர் என்று இவருக்குப் பெயர் சூட்டியது எல்லாம் பொருத்தமே என்று காண்போம்.