பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20. ஐயாறப்பன்

து ‘டெலிவிஷன்' காலம்.' மனிதனது அறிவு வளர்ச்சியின் காரணமாக மனிதனோடு மனிதன் எவ்வளவு தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு கொள்வதற்கு இன்றைய விஞ்ஞானம் சாதிக்கக் கொடுத்தவை எத்தனை எத்தனையோ? முதல் முதல் சங்கேத ஒலி மூலம் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்துக்குச் செய்தி அனுப்ப மனிதன் கற்றுக்கொண்டிருக்கிறான். அதன்பின் மனிதனுக்கு மனிதன் நேரில் பேசுவதுபோல் தொலை தூரத்தில் உள்ள இருவரும் பேசிக்கொள்ள வசதி செய்து கொண்டிருக்கிறான். பின்னர் ஓர் இடத்தில் எழுகின்ற ஒலியைப் பல இடத்தும் கேட்க ஏற்பாடுகள் செய்து அதன் மூலமெல்லாம் இன்னிசையை, தினசரிச் செய்திகளைப் பரப்பத் தெரிந்து கொண்டிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், ஓர் இடத்தில் நடக்கும் காட்சியையே தொலைவில் உள்ளவர்கள் உடனடியாகவே காணுமாறு மின்காந்த அலைகள் மூலம் அனுப்பக் கற்றுக்கொண்டிருக்கிறான். இதனையே இன்று 'டெலிவிஷன்' தொலைக்காட்சி 'காணுதல்' என்று சொல்கிறோம் நாம்.