பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

இந்தத் தொலைக்காட்சி காண இன்றைய விஞ்ஞானிகள் நமக்குத் துணை புரிகிறார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான் நம்மிடையே, அவன் யார்? அவன் காட்டிய டெலிவிஷன் காட்சி என்ன என்று தெரியவேண்டாமா? அதற்குச் சமயக் குரவரில் ஒருவரான அப்பர் வரலாற்றைப் படிக்க வேணும். வரலாறு இது தான். நாவுக்கரசர் பல தலங்களுக்குச் சென்றுவிட்டுக் காளத்தி வந்து சேருகிறார். அவருக்கு ஓர் ஆசை, தென் கயிலையாம் காளத்தியிலிருந்து வட கயிலைக்குச் சென்று அங்கு இறைவனை நேருக்கு நேரே கண்டு வணங்க வேண்டும் என்று. அந்த எண்ணத்தோடேயே தளர்ந்த அந்த வயதில் தம் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். வாரணாசிவரை வந்திருக்கிறார். உடன் வந்த அடியார்களால் அதற்குமேல் தொடர முடியவில்லை. அவர்களையெல்லாம் அங்கே நிறுத்திவிட்டு மேலும் செல்கிறார்.

கைகால் தளர்ந்தாலும், மார்பினால் புரண்டு புரண்டாவது போய்விட வேண்டும் என்றே தொடர்ந்து செல்கிறார். இந்த நிலையில் இறைவன் ஒரு முனிவர் உருவில் வந்து, 'கயிலையை மானிடர் இந்த ஊனக்கண்ணால் காணுதல் இயலாது அப்பனே! ஆதலால் திரும்பிவிடு' என்கிறார். அப்பரோ, 'ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்கிறார். உடனே இறைவன் அவருக்கு இரங்கி, அங்குள்ள பொய்கை ஒன்றைக் காட்டி அதில் முழுகும்படி சொல்கிறார். அப்படியே முழுகியவர் பின் எழுந்தது திருவையாற்றிலுள்ள திருக்குளத்திலேதான். எழுந்தவர் கண்முன் எழுகிறது கயிலை. அங்கு அவர் கண்ட உயிர்கள் எல்லாம் சக்தி சிவமாகவே விளங்குகின்றன.

வே.மு.கு.வ - 13