பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

183

படுவானேன் என்று அத்தலத்து அன்பர்களைக் கேட்டால், "இது தெரியாதா? தஞ்சையிலிருந்து திருவையாறு வரும்போது வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுட்டி, காவேரி என்று ஐந்து நதிகளைக் கடக்கிறீர்களே அதனால்தான் ஐயாறு என்கிறோம் நாங்கள்” என்பார்கள். சரி, கும்பகோணத்திலிருந்து வரும்போது ஓர் ஆற்றையுமே கடக்கவில்லையே என்றால், அதற்கு அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது. உண்மையில் ஐயாறு என்றால், அழகிய ஆறாகிய காவிரி, அக்கரையில் உள்ள அழகிய ஊர் என்றுதான் பொருள்.

'செண்டாடு புனற் கன்னி, செழுமணிகள் வந்தலைக்கும் திருவையாறு' என்றுதானே ஞானசம்பந்தர் பாடி மகிழ்கிறார். இந்த ஐயாறை ஐந்து ஆறுகளாக்கி அங்குள்ள இறைவனையும் பஞ்சந்த ஈசுவரர் ஆக்கி அங்குள்ள தீர்த்தமும் ஐந்து என்று கணக்குக் காட்டி, மகிழ்கிறார்கள் மக்கள். இவர்களோடெல்லாம் நாம் விவாதிக்க வேண்டாம். நேரே கோயில் வாயிலிலே போய்ச் சேரலாம். கும்பகோணத்திலிருந்து காரிலோ பஸ்ஸிலோ வந்தால் கோயில் வாயிலிலே வந்து முட்டுவோம். இல்லை, தஞ்சை வழி வந்தால் காவிரியைக் கடந்து கிழக்கு நோக்கி நடந்து அதன் பின் வட பக்கம் திரும்பிக் கோயில் வாயில் வந்து சேரவேணும். காவிரிக் கரையில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் இந்தக் கோயில் ஒன்றையே காவிரிக் கோட்டம் என்று அழைத்திருக்கின்றனர் நமது முன்னோர்.

இங்கு ஐயாறப்பனுக்கும் அவன் துணைவி அறம்வளர்த்தாளுக்கும் கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. சுவாமி கோயில் பழைய நிலையிலேயே இருக்கிறது. இரண்டு கோயில் வாயிலையும் இரண்டு பெரிய கோபுரங்கள் அழகு செய்கின்றன. சுவாமி கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே வந்ததும் ஒரு பெரிய