பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வேங்கடம் முதல் குமரி வரை

வெளிப்பிரகாரம். அந்தப் பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையிலேதான் சூரிய தீர்த்தம். அதற்கு மேல்புறம் அப்பர்அவர் கண்ட கயிலைக் காட்சியின் ஞாபகமாக ஒரு கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவே தக்ஷிண கயிலாயம். இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் மனைவியார் பஞ்சவன் மாதேவி. இதை அடுத்தே அப்பர் எழுந்த சமுத்திர தீர்த்தக் குளம் இருக்கிறது. தென் கயிலாயத்தை உருவாக்கியவர்கள் ஓர் உத்தர கயிலாயத்தையும் கட்டி முடிக்க மறக்கவில்லை; அக்கோயில் வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. அதனைக் கட்டியவர் ராஜராஜனது மனைவியார் லோகமாதேவி. அதனால் அதற்கு லோகமாதேவீச்சுரம் என்று பெயர். வெளிப்பிரகாரத்தைச் சுற்றி விட்டு உள்ளே போகுமுன் தெற்கு வாயிலில் உள்ள ஆட்கொண்டார். சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.

இந்த ஆட்கொண்டார் காலசம்ஹார அம்சத்தினர். வட நாட்டு அந்தணச் சிறுவனான சுசரிதன் குறைவான ஆயுளை உடையவன். ஆதலால் அவன் யமபயத்தைப் போக்கிக்கொள்ளத் திருவையாறு வந்து பஞ்சாக்கர ஜபம் செய்கிறான். சிவபெருமானே தன் துவாரபாலகர் ஒருவரை அவனுக்குக் காவல் புரியுமாறு கட்டளையிடுகிறார். யார் காவல் இருந்தால் என்ன? குறித்த காலத்தில் யமன் சுசரிதன் உயிரைக் கவர விரைகிறான், சிவபெருமான் எழுந்தருளி யமனை மிதித்து மாய்த்துச் சுசரிதனைக் காத்தருள்கிறான், அப்படி எழுந்தருளிய சிவவடிவமே ஆட்கொண்டார். அவர் காலடியிலே யமன் கிடக்கிறான். பின்னர் இறை அருளால் உயிர் பெற்று எழுந்தான் அவன் என்பது புராண வரலாறு, இந்த ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கும். நாமும் இவரை வணங்கி யமபயம் நீங்கியபின், பிரதானக் கோயிலுக்குள் நுழையலாம்.

'கோயிலில் உள்ள மண்டபங்களை யெல்லாம் கடந்து கருவறை சென்று ஐயாறப்பனை முதலில் தரிசிக்கலாம்.