பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

187

வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்குகிறார் போலும். இந்தச் சுற்றில் இவரைத் தரிசித்து விட்டுச் சென்ற வழியே திரும்பிவிட வேண்டும். இவரைக் கடந்து செல்லலாகாது என்பது அங்குள்ள ஐதீகம். அடுத்த சுற்றிலேதான் மேலப்பிரகாரத்திலே தனுஷ் சுப்பிரமணியர் கருவறைக்கு நேர் மேற்கே, கிழக்கு நோக்கி நிற்பார். இதற்கு அடுத்த சுற்றிலேதான் சோமாஸ்கந்தருக்குத் தனிச் சந்நிதி.

இனி, இந்த ஐயாறப்பர் கோயிலை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்து, அறம் வளர்த்தாள் கோயிலுக்குச் செல்லலாம். இவளையே தர்ம சம்வர்த்தனி என்று நீட்டி முழக்கி அழைக்கிறார்கள். வடமொழிப் பெயரில் மோகம் கொண்டவர்கள். இந்த அம்பிகைக்கு ஒரு பரீக்ஷை வைத்திருக்கிறார் இறைவன், இறைவன் இரண்டு படி அரிசியை அளந்து கொடுத்து உலகில் உள்ள மக்கள் பசியை எல்லாம் போக்கச் சொல்லியிருக்கிறார். அம்மையுைம் அதைப் பெற்று முப்பத்திரண்டு தருமங்களைக் குறைவற முடித்திருக்கிறாள். இதனாலேயே அறம்வளர்த்தாள் என்ற பெயரும் பெற்றிருக்கிறாள். அம்பிகை அழகொழுகும் வடிவத்தில் நிற்கிறாள். அவளையுமே கண்டு தரிசித்து விட்டுத் திரும்பலாம்.

இத்தலத்தில் சிறப்பான திருவிழா-சப்தஸ்தானமே. சித்திரா பௌர்ணமி அன்று இந்தத் திருவிழா நடக்கும். ஐயாறப்பர், அறம் வளர்த்தாளுடனும், நந்தியம் பெருமான் சுயம்பிரகாச அம்மையுடனும் எழுந்தருளிய, பழனம், சோற்றுத்துறை, வேதிக்கூடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம் என்னும் ஆறு தலங்களிலும் உபசாரங்கள் பெற்று, மறுநாள் காலை திருவையாற்றுக்குத் திரும்புவர். இந்த ஏழூர் விழாவிலே மக்கள்கலந்து கொண்டு மூர்த்திகளின் பின்னாலேயே நடந்து செல்வர். வழியெல்லாம் தண்ணீர்ப் பந்தலாக இருக்கும். உண்பதற்கு உணவும், குடிப்பதற்கு இளநீரும் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும்.