பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த சப்தஸ்தான க்ஷேத்திரங்கள் எல்லாமே பாடல் பெற்றவை. இவற்றில் கண்டியூர் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. பூந்துருத்தியில், அப்பர் மடம் கட்டிச் சில காலம் இருந்து வாழ்ந்திருக்கிறார்.

பூந்துருத்தி, பூந்துருத்தி என்பீராகில்
பொல்லாத புலால் துருத்திப் போக்கலாமே.

என்று நமக்குச் சொல்லி விட்டும் சென்றிருக்கிறார். இந்த ஏழூர் விழாவிலே கலந்து கொள்வதே ஒரு புதிய அனுபவம். ஐயாறப்பர் கோயில் ஆதியில் சூரிய வம்சத்து அரசன் பிரியவரதனால் கட்டப்பட்டது. பின்னர் கரிகால் பெருவளத்தான், வேங்கிநாட்டு விமலாதித்தன், விக்கிரம சோழன், இவர்களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர், மராத்திய மன்னன் சரபோஜி எல்லாம் திருப்பணி செய்திருக்கிறார்கள். இன்று இந்தக் கோயில் தருமபுர ஆதீனத்தார் ஆளுகையின் கீழ் இருக்கிறது. திருவாரூரிலே பிறந்த கர்நாடக சங்கீத பாஸ்கரர் தியாகையர், அவரது கடைசிக் காலத்தில் இத்தலத்தில் வந்து தங்கி இங்கேயே சமாதி கொண்டிருக்கிறார். அவரது சந்நிதியிலே தை மாதம் பகுள பஞ்சமியிலே தியாக ராஜ உத்சவம் நடப்பது உலகம் அறிந்ததாயிற்றே. ஆதலால் அவரது கோயிலுக்கும் சென்று வணக்கம் செலுத்திவிட்டே திரும்புங்கள் என்று நான் சொல்ல வேண்டுமா, என்ன?