பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21. மழபாடி மாணிக்கம்

லகத்தில் நமக்குக் கிடைக்கும் மணிகளில் எல்லாம் மிக்க உறுதியானது, மிக்க ஒளி உடையது வைரம் என்பதை அறிவோம். இது காரணமாகவே அதன் மதிப்புமே உயர்ந்திருக்கிறது. வைரக் கம்மல்கள் அணிந்த பெண்ணுக்கும் வைர மோதிரம் அணிந்த ஆணுக்கும் சமுதாயத்திலே ஒரு மதிப்பு இருக்கிறதே. இந்த வைரத்தையே வஜ்ரம் என்றும் கூறுவார்கள். இந்த வைரம் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பின் மேல் மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்திருக்கின்றன. பலவகையான இயற்கை மாற்றத்தால் இம்மரங்கள் நிலத்துக்குள் புதைந்திருக்கின்றன. கணக்கற்ற ஆண்டுகள் இப்படிப் புதைந்து கிடந்தமையால் அவை மிகச் செறிவு பெற்று நிலக்கரிப் பாறைகளாக உறைந்திருக்கின்றன.

மேலும் மேலும் மண்ணும் கல்லும் அந்தப் பாறைகளை அழுத்த உள்ளேயிருந்து வெப்பமும் தாக்க, இந்த அழுத்தம் காரணமாகக் கரிப்பாறைகள் வைரமணிப் பாறைகள் ஆகியிருக்கின்றன. இப்படிக் கரியானது அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் உள்ளாகும்போது தான்