பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வேங்கடம் முதல் குமரி வரை

வைரமாகிறது என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இத்தனை அழுத்தம் காரணமாகப் பிறப்பதினால்தான் அத்தனை வலிவுடனும் வைரம் இருக்கிறது. உறுதியான உள்ளம் படைத்தவர்களை வைர நெஞ்சு உடையவர்கள் என்று கூறுகிறோம்; பாராட்டுகிறோம். பாரதி பாடினானே நம் நாட்டுப் பாப்பாக்களைப் பார்த்து :

உயிர்களிடத்து அன்புவேணும் - தெய்வம்
உண்மை என்று தானறிதல் வேணும்
வயிரமுடைய நெஞ்சு வேணும் -- இது
வாழும் முறைமையடி பாப்பா

என்று.

மனிதர்களில் வைரமுடைய நெஞ்சு படைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அஞ்சி அஞ்சிச் சாகும் மனிதர்கள் தானே இங்கு அதிகம். ஆனால் அந்த மனிதர்களையெல்லாம் காக்கும் இறைவன் நல்ல திடமான வைர நெஞ்சு படைத்தவனாக இருந்திருக்கிறான். எது வந்தாலும் அசையாது அஞ்சாது நிற்கும் இயல்புடையவனாக இருந்தால் தானே, அவன் உலகு, உயிர் அனைத்தையும் காத்தல் கூடும். அப்படி இருப்பவனையே வைரத்தூண் என்போம். அப்படியே அழைத்திருக்கிறார்கள். ஒரு தலத்தில் உள்ள இறைவனை. அந்தத் தலத்து இறைவன் பெயரே வஜ்ரஸ்தம்பேசுரர். அவரையே அருள் மிக அப்பர் அடிகள், ‘மறை நான்கும் ஓலமிட்டு வரம் ஏற்கும் மழபாடி வயிரத் தூணே' என்று மனமுருகிப் பாடுகிறார். இவர் எப்படி வைரத் தூண். ஆனார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரம்ம லோகத்திலிருந்து சிவலிங்கத்தைப் புருஷா மிருகம் எடுத்து வந்து கொள்ளிடக் கரையில் பிரதிஷ்டை செய்து விடுகிறது. பிரம்மாவோ தான்பூஜித்த லிங்கத்தை தேடி அங்கு அதைப் பெயர்த்து மீண்டும் தன் உலகத்துக்கு எடுத்துப் போக விரும்பியிருக்கிறார். இறைவனோ அசையாது ஆடாது வைரத்தூணாக, வஜ்ர ஸ்தம்பமாக