பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

191

நின்றிருக்கிறார். பிரமன் அவரை அப்படியே விட்டு விட்டே திரும்பியிருக்கிறான். லிங்க வடிவில் பிரம்ம லோகத்திலிருந்து வந்தவர் எப்படி வைரத்தூணாக மாறினார்? கற்ப கோடி காலங்களாகப் பக்தர்கள் அன்பென்னும் பூமியில் அல்லவா புதைந்திருக்கிறார். தேவர் ஒரு புறமும் மக்கள் ஒரு புறமும் இருந்து அழுத்த அழுத்த, அவர் வைரமாக - வைரத்தூணாக மாறியதில் வியப்பில்லை தானே. இந்த வஜ்ரஸ்தம்பேசுரர் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருமழபாடி. அந்த மழபாடிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமழபாடி, திருச்சி ஜில்லாவில் கொள்ளிடக்கரையில் உள்ள ஊர். இதற்குச் செல்வதற்குத் தலயாத்திரிகர்களை வழிகேட்டால், திருவையாற்றிலிருந்து ஒரு மைல் மேற்கே போய்த் தில்லைஸ்தானம் என்று இன்று வழங்கும் நெய்த்தானத்து நெய்யாடி அப்பரையும் பாலாம்பிகையும் தரிசித்துவிட்டு வடக்கே திரும்பி இரண்டு மைல் நடந்து கொள்ளிட நதியையும் கடந்தால் சென்று சேரலாம் என்பர். இது எல்லாம் நல்ல பங்குனி சித்திரை மாதம் கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத காலத்துக்குச் சரி. ஆற்றிலே தண்ணீர் இருந்தால் இந்த வழி எல்லாம் சரிப்பட்டு வராது. நேரே திருச்சி விருத்தாசலம் ரயில் பாதையில் புள்ளம்பாடி ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கு நோக்கிப் பன்னிரண்டு மைல் நடந்தோ வண்டியிலோ போகவேணும்.

இதைவிடச் சுளுவான வழி, திருச்சியிலேயே பஸ் ஏறி லால்குடி, பூவாளூர், புள்ளம் பாடி வழியாகக் கிட்டத்தட்ட முப்பது மைல் போக வேணும். சொந்தக் கார் உள்ள மகாராஜாக்கள் 'ஜம்' என்று காரிலேயே போய்ச் சேரலாம். கோயில் வாயிலிலே கொள்ளிட நதி ஓடும். அதுவும் அங்கு வடக்கு நோக்கியே ஓடும். 'ஓ! அப்படியானால் அது உத்தர வாஹினியாயிற்றே. அங்கு ஸ்நானம் செய்வது எவ்வளவோ புண்ணியத்தைத் தருமே' என்று நினைத்து முதலிலே நதியில்