பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வேங்கடம் முதல் குமரி வரை

இறங்கி நன்றாக நீராடுங்கள். அங்கு எப்போதுமே குளிக்கும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்குமாம். இப்படிக் கொள்ளிடத்தில் நீராடி விட்டுக் கரையேறிக் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் வாயிலை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. ஆற்றிலே நீர் நிறைந்து போனால் கோயிலுக்குள்ளேயே தண்ணீர் வந்து விடும். அப்படித் தாழ்ந்தே இருக்கிறது வாயில். கோயிலுள் செல்லுமுன் இத்தலத்துக்கு எப்படி மழபாடி என்ற பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளலாம். சேரர் மரபில் ஒரு கிளையினர் மழவர், அந்த மழவர்கள் தங்கியிருந்த இடம் மழபாடி என்று ஆகியிருக்கிறது. நமக்குத்தான் அந்த மழவர் மகள் செம்பியன் மாதேவி முன்னமேயே நன்கு அறிமுகம் ஆனவள் ஆயிற்றே.

இது தவிர இத்தலத்தில் இறைவன் மழு ஏந்தி நர்த்தனம் செய்திருக்கிறார். அதனால் மழு ஆடி என்று பெயர் பெற்று மழபாடி ஆயிற்று என்றும் கூறுவர். இதற்கேற்ப மழு ஏந்தி இறைவன் திருத்தம் செய்யும் கற்சிலை ஒன்றும் கோயிலுள் இருப்பதைப் பார்க்கிறோம். கோயில் நல்ல பெரிய கோயில், பெரிய பிரகாரங்களையுடையது. வெளிப்பிரகாரத்தில் காணவேண்டியவை சிறப்பாக ஒன்றும் இல்லை. ஆதலால் இடை நிலைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து சென்றால் இறைவன் திருமுன்பு வந்து நிற்போம். வைரத்தூண் என்று பெயர் தாங்கியவர் ஆயிற்றே என்று அவர் மேனியில் வைர ஒளியை எதிர்பார்த்தல் கூடாது. வஜ்ரஸ்தம்பேசுரர் என்பதனால் பெரியஸ்தம்பம் போலும் இருக்கமாட்டார். நல்ல காத்திரமில்லாத வடிவில் லிங்கத் திருஉருவாக அவர் இருப்பார். இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள்.

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
அமுதாய் உண்டு அமரர்கள் தம்