பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

கேசரி வர்மன் என்னும் முதல் பராந்தக சோழன் காலம் முதல், மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், ஹொய்சல மன்னர்கள், விஜயநகர வேந்தர்கள் காலம்வரை இந்தக் கோயிலில் பல பகுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பல நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. திருவிசைப்பா பாடிய கண்டராதித்த சோழர், ராஜராஜன் முதலியோர் காலத்தில் இக்கோயில் பலவகையாலும் விரிவடைந்திருக்கிறது. மழபாடி பக்கத்திலேயே கண்டாரதித்த சதுர்வேதி மங்கலம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அதுவே இன்று கண்டராச்சியம் என வழங்குகிறது. கண்டராதித்தரது மனைவியின் திருப் பெயரால் செம்பியன் மாதேவிப் பேரேரி ஒன்றும் வெட்டப்பட்டிருக்கிறது. இந்த அம்மையின் மற்றொரு பெயரான குலமாணிக்கம் என்றே ஒரு வாய்க்காலுக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. சோழர் ஹொய்சலர் சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இந்தக் கோயில் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அனந்தம்.

நேரமும் வசதியும் உடையவர்கள் மழபாடியிலிருந்து வடக்கே பத்து மைல்கள் சென்றால் பழுவூர் செல்லலாம். பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமான பழுவேட்டரையது ஊர் அது. பரசுராமர், தாயாம் ரேணுகையைத் தந்தையின் கட்டளைப்படி கொன்றார் என்பதும், அந்தப் பழியை இங்குள்ள வடமூல நாதரை வணங்கித் தீர்த்துக்கொண்டார் என்பதும் புராண வரலாறு. நமது பழிகளும் நம்மை விட்டு நீங்க இப்பழுவூர் சென்று வடமூல நாதர் அருந்தவ நாயகி இருவரையும் வணங்கலாம். திருச்சிக்குத் திரும்பும்போது வழியில் உள்ள அன்பில் ஆலந் துறையார், சுந்தரராஜப் பெருமாள், லால்குடியிலுள்ள திருத்தவத் துறையார் முதலியவர்களையும் வணங்கி விட்டே திரும்பலாம். இதற்கெல்லாம் வசதி செய்துகொள்ள வேண்டுமானால் சொந்தக் காரிலே தான் தலயாத்திரை தொடங்க வேண்டும் என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.