பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வேங்கடம் முதல் குமரி வரை

கிடைக்கவில்லையோ என்னவோ? விஷ்ணு அங்கு செல்ல மறுத்த காரணம் தெரிய நாம் பழைய இதிகாச காலத்துக்கே செல்ல வேண்டும். இலங்கையில் மலைமேல் கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறான் இராவணன். அவன் அயோத்தி ராமனின் மனைவி சீதையை எடுத்துச்சென்று அசோக வனத்தில் சிறை வைத்திருக்கிறான். சிறையிலிருந்து செல்வியை மீட்க ராமன்படை திரட்டிக் கொண்டு இலங்கைக்கே சென்றிருக்கிறான்.

ராவணன் தம்பி விபீஷணன் ராமனுடன் சேர்ந்து அவன் வெற்றி பெற உதவியிருக்கிறான். ராவணன் வதம் முடித்துத் திரும்பும்போது, இலங்கையையே விபீஷணனுக்குத் தந்து அவனுக்கு அங்கே முடிசூட்டியிருக்கிறான். பின் தம் துணைவியாம் சீதையுடன் அயோத்தி திரும்பித் தானும் பட்டாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான் ராமன், இந்தப் பட்டாபிஷேக விழாவுக்கு வந்த விபீஷணனுக்குப் பரிசாகத் தான் ஆராதித்து வந்த அரங்கநாதனையே கொடுத்திருக்கிறான். அரங்கனோடு கூடிய விமானத்தையே எடுத்துச் சென்ற விபீஷணன் காவிரிக்கரை சேர்ந்ததும் அங்கு நீராட எண்ணி விமானத்தை அங்கே இறக்கியிருக்கிறான். அவ்வளவுதான்; நீராடி விட்டு விபீஷணன் விமானத்தை எடுத்தால் அவனால் எடுக்க முடியவில்லை. அரங்கனும் இந்த இடத்தை விட்டுக்கிளம்ப மறுத்து விடுகிறான். விபீஷணன் ஏமாற்றத்தோடு, வெறுங்கையனாகவே இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான். என்றாலும் விபீஷணன் வேண்டிக் கொண்டபடி இலங்கையை நோக்கிய வண்ணமாகவே காவிரிக் கரையில் சயனித்துவிடுகிறான் அரங்கன்.

குடதிசை முடியை வைத்து,
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி,
தென்திசை இலங்கை நோக்கி