பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

199

அரவணையில் துயில்பவனாகத்தானே இன்னும் காட்சி கொடுக்கிறான் அரங்கநாதன். அந்த அரங்கநாதனைக் காணவே ஸ்ரீரங்கம் செல்கிறோம் நாம் இன்று.

அரங்கன் கோயிலுக்குச் செல்ல வழி ஒன்றும் சொல்ல வேண்டாம். ‘பணியரங்கப் பெரும்பாயல் பரஞ்சுடரையாம் காண, அணியரங்கம் தந்தானை அறியாதார்' என்று ஆயிரம் வருஷ அறியாதார்க்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவனைத் தென் தமிழ் நாட்டினர் மாத்திரம் அல்ல மற்ற வடநாட்டினருமே நன்கு அறிவார்கள். திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி மேற்கு நோக்கி நான்கு பர்லாங்கு நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். இது தவறு. கோயிலின் பிரதான வாயிலுக்கு வருமுன் கோயிலைச் சுற்றிக் கட்டியுள்ள மதில்களையெல்லாம் கடக்கவேணுமே. மதில் முக்கால் மைல் சதுர விஸ்தீரணத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழாவது மதில் சுவரின் நீளம் 3072 அடி; அகலம் 2521 அடி என்றால் கோயில் எவ்வளவு பெரியது என்று தெரியுமல்லவா? சப்த லோகங்களுமே இக் கோயிலின் சப்த பிரகாரங்களாக அமைந்திருக்கின்றன என்பர்.

இங்கு இந்த மதில்கள் எழுந்த வரலாறே சுவையானது. அன்று விபீஷணன் கொண்டு வந்த ரங்க விமானமும், ரங்கநாதனுமே காவிரி மணலில் புதைந்து விடுகிறார்கள். காடு மண்டிவிடுகிறது. தர்மவர்மா என்னும் சோழ மன்னன் வேட்டைக்கு வந்தபோது ஒரு கிளி அவன் காதில் அங்கு ரங்க விமானம் புதையுண்டு கிடந்த ரகசியத்தைச் சொல்கிறது. காடு வெட்டி நிலந்திருத்திச் சோழ மன்னன் ரங்கவிமானத்தை வெளிக் கொணர்கிறான். கோயில் கோபுரம், விமானம், மண்டபம் எல்லாம் கட்டி அரங்க நாதனை அங்கு கிடத்தி வைக்கிறான். கிளி சொன்னதை மறக்காமல் கிளி மண்டபம் ஒன்றையும் கட்டுகிறான். தன் பெயரால் தர்மவர்மா