பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வேங்கடம் முதல் குமரி வரை

பிரதக்ஷிணம் ஒன்றையும் எழுப்புகிறான். இவன்றன்பின் வந்த மன்னரும் மக்களும் ஒவ்வொரு பிரகாரமாகக் கட்டி முடிக்கிறார்கள். இப்படி எழுந்த பிரதக்ஷிணங்களும் மதில்களும் ஆறு. அவைதாம் ராஜ மகேந்திரன் பிரதக்ஷிணம், குலசேகரன் பிரதக்ஷிணம், ஆலி நாடன் பிரதக்ஷிணம், அகளங்கன் பிரதக்ஷிணம், திரு விக்ரமன் பிரதக்ஷிணம், மாட்ட மாளிகைப் பிரதக்ஷிணம் என்பவை, ஏழு மதில்களையும் ஏழு ஆடைகளாக வனைந்திருக்கிறான் அரங்கநாதன் என்பர். இதனையே அடைய விளைஞ்சான் என்றும் கூறுவர் பாமர் மக்கள். இந்த மதில்கள் எல்லாம் யார் யாரால் எப்போது எப்போது கட்டப்பட்டன என்று விரித்தல் இயலாது. ஒன்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இந்தக் கோயிலுக்குப் பெரிய மதிலைக் கட்டியவன் ஆலி நாடனான திருமங்கை மன்னனே. அவனது காதலி குமுதவல்லியின் விருப்பப்படி பரம பாகவதர்களுக்குத் ததியாராதன கைங்கர்யம் செய்வதை மேற்கொள்கிறான்.

தன்கையில் பொருள் இல்லாத போதெல்லாம் வழிப்பறி செய்கிறான். இவனுக்கு அருள் பாலிக்கவே அரங்கனும் அவன்துணைவி ரங்நாயகியும், திருமணத் தம்பதிகளாக வந்து இந்த மங்கை மன்னனாம் கலியன் கையில் சிக்கிக் கொள்கிறார்கள். கலியனும் அந்த ஆடை அணிகளையெல்லாம் கவர்ந்து கொள்கிறான். கவர்ந்த பொருளையெல்லாம் மூட்டையாகக் கட்டியபோது அதை எடுத்துச் செல்ல இயலாதவனாக நின்றிருக்கிறான். அப்படி. எடுக்க இயலாதபடி. செய்த மந்திரம் என்ன என்று கேட்டபோது, மணவாளக் கோலத்தில் வந்த அரங்கன் நாராயணனது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தையே உபதேசித்திருக்கிறான். இவ்வாறு ஞானோதயம் பெற்ற கலியனே பின்னர் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று பாடிப் பாடி நாராயணனைப் பரவியிருக்கிறான். தேடிச் சேர்த்த பொருளை எல்லாம், அரங்கனுக்கு மதில் கட்டுவதிலேயே