பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

203

'கருது செம்பொனின் அம்பலத்தில் கடவுள் நின்று நடிக்கிறான்' என்று பாடிய கவிஞன், இந்தக் 'காவிரித் திருநதியிலே கருணை மாமுகில் துயில்வதையும்' பாட மறக்கவில்லை. சுமார் பதினைந்து அடி நீளமுள்ள கருவறையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான் ஆதிசேடன். அவனது பாயலில் அழகாகக் கண்வளருகிறான் அரங்கநாதன். இரண்டு திருக்கரங்களே அவனுக்கு. ஒரு கை தலையைத் தாங்க மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கிடக்கிறது. ஆதிசேடனும், அரங்கநாதனும் சுதை உருவில் உருவானவர்களே.

ஆதிசேடன் பொன் முலாம் பூசிய தகடுகளால் பொதியப்பட்டிருக்கிறான். அரங்கனோ நல்ல கன்னங்கரிய வடிவினனாகத் தைலக் காப்புக்குள்ளே புதையுண்டு கிடக்கிறான், அகன்ற மார்பிலே முத்தாரம், கௌஸ்துபம், வனமாலை எல்லாம் புரள்கின்றன. தலையிலே நீண்டுயர்ந்த கிரீடம் அணி செய்கிறது. இத்தனை கோலத்துடன் இருக்கும் அவன் தனிமையை நாடியிருக்கிறான். என்றும் இணைபிரியாத துணைவியரான ஸ்ரீதேவி பூதேவிகளுக்குக் கூட அங்கு இடம் இல்லை. நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும் எழவில்லை. இதற்கெல்லாம் ஈடு செய்யவே அந்தக் கிடந்த கோலத்தின் முன்பு நின்ற கோலத்தில் செப்புச் சிலை விடிவில் அழகிய மணவாளன் இரண்டு அணங்குகளோடு தங்க மஞ்சத்தில் நின்று கொண்டிருக்கிறான். இந்த உத்சவரே வெளியில் எல்லாம் எழுந்தருளிப் பக்தர்களுக்கு எல்லாம் காட்சி தருகிறார். இருவரையும் கண்குளிரத் தரிசித்தபின் வெளிவந்து பிரகாரங்களை யெல்லாம் சுற்றிக் கொண்டு மேலே நடக்கவேணும்.

இந்த அரங்கநாதன், தன்னை ஆராதித்து வந்த ராமனைப்போல் ஏகபத்னி விரதன் அல்ல. எப்போதும் உள்ள ஸ்ரீதேவி பூதேவியோடு இன்னும் ஐந்து பேர்கள் இவனது