பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

205

அவளையும் மணந்து கொள்கிறான். இவர்கள் எல்லாம் போகட்டும்; டில்லி சுல்தானின் மகள் ஒருத்தியின் உள்ளத்திலும் அல்லவா இவன் காதல் விதை விதைக்கிறான்! முகமதியர்கள் இந்த நாட்டைப் படையெடுத்து இங்குள்ள கோயில் கோபுரங்களை யெல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கியதெல்லாம் சரித்திரம் கூறும் உண்மை. இப்படிப் படையெடுத்த பாதுஷா ஒருவன், ஸ்ரீ ரங்கம் வரை வந்து இங்குள்ள பல விக்கிரகங்களை எடுத்துச் சென்றிருக்கிறான். விக்கிரகங்களோடு விக்கிரமாக அழகிய மணவாளனுமே சென்றிருக்கிறான். ஆனால் பாதுஷாவின் மகள் இந்த அழகிய. மணவாளனின் அழகில் ஈடுபட்டு அவனை மட்டும் தன் அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறாள். அவன் அழகுக்கு அடிமையாகியிருக் கிறாள்.

பின்னர் ஸ்ரீ ரங்கத்து ஸ்தலத்தார் பாதுவாவை அணுகி அவன் எடுத்துச் சென்ற அழகிய மணவாளைைனத் திரும்பத் தரக் கேட்டிருக்கிறார்கள். பாதுஷாவும் தன் மகள் தூங்கும் சமயம் அறிந்து அழகிய மணவாளனை அவர்களிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான். விழித்தெழுந்த பாதுஷாவின் மகள் தன் அழகிய மணவாளனைக் காணாது, அவனைத் தேடி ஸ்ரீரங்கத்துக்கு ஓடி வந்திருக்கிறாள். இத்தனை பிரேமை கொண்ட மங்கையை இந்த அரங்கநாதன் பின்னர் மணந்து கொண்டதில் வியப்பில்லை. இந்தப் பாதுஷா மகளே துலுக்க நாச்சியார் என்ற பெயரிலே, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள்ளேயே தனிக் கோயிலில் இருக்கிறாள். சித்திர உருவிலே இக்கோயிலில் உறையும் பெருமாளுக்கு நிவேதனம் ரொட்டியும் வெண்ணெயும், அக்காரடிசிலும் அரவணையும் அந்தப் பாதுஷா மகளுக்கு ஒத்துக் கொள்ளாதே. பின்னர் அவள் கொடுப்பதைத்தானே இவன் ஏற்றுக் கொள்ள வேணும். இதற்கென்றே மாமனாராகிய பாதுஷா கொற நாட்டில் இரண்டு கிராமங்களையே சீதனமாக வேறு கொடுத்திருக்கிறராம்.