பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

207

அச்சுதா அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே

என்ற தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரது பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பாடிப் பரவலாமே. 'திருவரங்கப் பெருநகருள், தெண்நீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு களிக்கும்' குவசேகரது பக்தி எவரது பக்திக்குக் குறைந்தது? அரங்கத்து இன்னமுதரது குழல் அழகிலும், வாய் அழசிலும் தன்னை இழந்து நின்றவள் ஆண்டாள், பெரியாழ்வாரோ,

எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை
நினைக்கமாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன், அரங்கத்து அரவணைப்
பள்ளியானே!

என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து வைத்து முக்தி பெற வழி சொல்லுகிறார். அரங்கனும் இவர்களுக்கெல்லாம் அருள் செய்தது போல், நமக்கெல்லாம் அருள் செய்யத் தவறமாட்டார் என்று உறுதியோடு ஒரு பக்தர் கூறுகிறார் !

நாவுண்டு, நீ உண்டு, நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கு சோலை மதில் அரங்கத்தே உலகை
உண்டு உறங்குவான் ஒருவன் உண்டு.