பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ராமனுக்கும் சீதைக்கும் மிதிலையில் திருமணம் நடக்கிறது. அவர்களது மணக்கோலத்தைப் பாடுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

மன்றலின் வந்து மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தே

என்பது பாட்டு. இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. எப்படி ராமன் சீதை இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள்? எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் எண்ணுவேன் நான். இந்தச் சந்தேகம் என் உள்ளத்தில் மட்டுமே எழவில்லை. அன்னை பார்வதிக்குமே எழுந்திருக்கிறது. ஆகவே யோகம் போகம் அவற்றின் உண்மைகளைப்பற்றி ஒரு சந்தேகத்தையே கிளப்பி, அதற்கு விடையை இறைவனிடமே கேட்டிருக்கிறாள். அவரும் உடனே அதற்கு விடை சொல்லவில்லை. 'நீ பூலோகம்