பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209

சென்று அங்குள்ள ஞானத்தலத்தை அடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உனக்கு உபதேசம் செய்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைக்கிறேன்' என்று உத்தரவு போட்டிருக்கிறார். இறைவன் கட்டளைப்படியே ஞானபூமியை நாடிவருகிறாள் அன்னை. காவிரிக்கரையிலே முனிவர்களெல்லாம் இருந்து தவம் செய்யும் ஒரு சோலையைக் கண்டு அங்கு தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்து கொள்ள வந்தவள் ஆதலின் இனிய சுவை உடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள்.

அந்த அப்புலிங்கத்துக்கே அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்துக்கு இரங்கி அண்ணல் இந்தக் காவிற்கு வந்து சந்தேகத்துக்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான். 'உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக்காட்டுதல் போல, உலக மக்களுக்கு யோக நிலையையும் போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவிப் போசியாகவும், அதே சமயத்தில்யோகசித்தி பெற்றுயோகியாகவும் மாறுகிறேன்' என்கிறார். ஆம்! யோக நிலையில் இருக்கும் இறைவன் போகியாகவும் காட்சி தரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள். இந்த விளக்கத்தை அன்னை அகிலாண்டேசுவரி பெற்ற இடம் தான் திரு ஆனைக்கா. அந்த ஆனைக்காவுக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஆனைக்கா காவேரிக்கரையில், காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் உள்ள தலம். திருச்சி ஜங்ஷனிலிருந்து வடக்கே நாலுமைல் தொலைவில்