பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வேங்கடம் முதல் குமரி வரை

இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி, கிழக்கே நாலு பர்லாங்கு நடந்தால் கோயிலுக்கு வந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல் என்றும் திருவானைக் கோயில் என்றும் மக்களும் நெடுஞ்சாலைப் பொறியாளர்களும் அழைப்பார்கள், ஆனைக்கா என்றால் யானை வதிந்த காடு என்றுதான் பொருள். அதனாலேயே அத்தலத்தை கஜாரண்யம் என்றும் புராணங்கள் கூறும். இத்தலத்துக்கு ஏன் ஆனைக்கா என்று பெயர் வந்தது என்று தெரியத் தலவரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேணும்.

கைலையிலுள்ள இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞானபூமியிலே. இருவரும் அன்னை அகிலாண்டேசுவரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக்கரையில் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. சிலந்திக்கு யானைமீது கோபம். ஆதலால் சிலந்தி யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை வேதனை தாங்கமாட்டாமல் தன் துதிக்கையை ஓங்கி அடிக்கிறது. அதனால் சிலந்தியும் மடிகிறது. யானையும் துடிதுடித்து விழுந்து இறக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரது பக்தியையும் மெச்சி, இவர்களுக்கு முத்தி அளிக்கிறான் இறைவன். முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்தமாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமல், யானை ஏற இயலாத மாடக் கோயில்களாகவே எழுபது கட்டுகிறான் சோழமன்னன்,