பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

211

எழுபது கோயில்களில் படி ஏற இயலாத யானையும் ஒரு கோயிலைத் தன்னுடையதாக -ஆனைக்காவாகவே - ஆக்கிக் கொள்கிறது. இத்தனையும் கூறுகிறார் நாவுக்கரர்.

சிலந்தியும் ஆனைக்காவில்
திருநிழல் பந்தல் செய்து
உலந்து அவண் இறந்தபோதே
கோச் செங்கணானுமாக
கலந்தநீர் காவிரிசூழ்
சோணாட்டு சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார்
குறுக்கை வீரட்டனாரே

என்று திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடுகிறார்.

இனி, கோயிலுள் செல்ல முனையலாம். நல்ல தென்னஞ்சோலைக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறத்திலே உள்ள ஊர்களின் பெயரே, திரு வளர்ச்சோலை, உத்தமர்சேரி என்று. இந்தப் பெயர்களைச் சொல்லும்போதே நா இனிக்கும். இந்தக் கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி வரும்போது முதல் இரண்டு பிராகாரங்களிலும் உள்ள கோபுர வாயிலைக் கடந்துதான் வரவேண்டும். அந்தப் பிரகாரங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் நிறைந்திருக்கும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து தான் கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம் பிரகாரத்து மதில்தான் பெரிய மதில். இந்த மதிலையே திருநீற்று மதில் என்று கூறுகிறார்கள்.

விசாரித்தால் இம்மதில் கட்ட மன்னன் முனைந்த போது, சித்தர் ஒருவர் தோன்றி வேலை செய்தவர்களுக்கெல்லாம் திருநீற்றையே கூலியாகக் கொடுத்திருக்கிறார். அத்திரு நீறே பின்னர் ஒவ்வொருவர் கையிலும் பொன்னாக மாறியிருக்கிறது. இப்போதும் கோயிலில் நமக்குக்