பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வேங்கடம் முதல் குமரி வரை

பெருமை உடையவள் அகிலாண்டநாயகிதான். அவள் 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும் பின்னரும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயில்.' ஆதலால் மற்றப் பிரகாரங்களை எல்லாம் கடந்து அவள் சந்நிதிக்கே வந்து சேரலாம். அவளை எதிர்நோக்கி இருப்பவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்தாபித்த விநாயகர். அன்னையின் வடிவம் நல்ல கம்பீரமான வடிவம், கருணை பொழிகின்ற திருமுகம். வணங்கும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருளுகின்றவள். இவ்வன்னையைத் தாயுமானவர் வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே

என்பது அவரது பாட்டு. இந்த அம்மையே இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக வரலாறு. அதனால் இன்றும் உச்சிக்காலப் பூஜையின்போது இந்த அம்மன் கோயில் அர்ச்சகர் பெண் வேடந்தரித்து இறைவனைப் பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில் அர்ச்சகர் தேவேந்திரனைப்போல ராஜகம்பீர உடை அணிந்து தியாகராஜரைப் பூஜிப்பது போல. இந்த அப்புலிங்கம் என்னும் அமுதலிங்கரும், அன்னை அகிலாண்டநாயகியும் தங்கள் சொத்தைப் பராமரித்துக் கொள்வதிலே மிக்க அக்கறை உடையவர்கள் என்றும் தெரிகிறது. அதற்கு ஒரு சிறு கதையும் இருக்கிறது. அக்காலத்தே உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன், இந்த அன்னையையும் அத்தனையும் வழிபட வந்திருக்கிறான் தன் மனைவியுடன். மனைவியின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை இறைவனுக்கு அணிந்தால் அழகாயிருக்குமே என்று எண்ணியிருக்கிறான்.