பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வேங்கடம் முதல் குமரி வரை

தருமி என்று ஒரு கோவில் அர்ச்சகன் வருகிறான். ஓர் ஓலையை நீட்டுகிறான். அந்த ஓலையில்,

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ?
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரியை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

என்ற பாட்டு எழுதி யிருக்கிறது. தும்பியை நோக்கி, பெண்ணின் கூந்தல் மணத்தை விடச் சிறப்பான மணம் உடைய பூ வேறு உண்டோ என்று கேள்வி கேட்பது போல், மன்னன் சந்தேகத்துக்கே அல்லவா விடை இருக்கிறது பாட்டில். ஆதலால் பரிசை தருமிக்கு வழங்க விரைகிறான் மன்னன். ஆனால் இடை புகுந்து தடுக்கிறான் சங்கப் புலவன் நக்கீரன். அவனது ஆட்சேபணை, 'பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது. அதனால் அப்பாடலில் பொருள் குற்றம் உண்டு' என்பதுதான். தருமிக்கோ பதில் சொல்லத் தெரியவில்லை, பாட்டு அவன் எழுதியது அல்லவே? அதை எழுதியது ஆலவாய் மேவும் அவிர் சடைக் கடவுள அல்லவா; அதனால் அவரிடமே சென்று முறையிடுகிறான். அவரே கிளம்பி வந்து சங்கப் புலவராம் நக்கீரனைச் சந்திக்கிறார்.

அவனோ இறைவனே வந்தாலும் சாற்றிய செய்யுள் குற்றமே என்று சொல்கிறான். சிவபெருமானோ, 'நீ வணங்கி வரும் உமையின் கூந்தல் கூடவா இயற்கை மணம் வாய்ந்ததில்லை?' என்கிறார். 'அதற்குமே கிடையாது நறுமணம் இயற்கையில்' என்று சாதித்து விடுகிறான். அப்படித் தருக்கிக் கூறியதால் நக்கீரன் இறைவன் கோபத்துக்கு உள்ளானதும், தொழுநோயால் துன்பமுற்றதும் சாப விமேசானம் பெற்றதும் ஒரு தனிக் கதை. இந்தக் கதையைப் படித்தபின் இயற்கையிலேயே நறுமணம் உடைய