பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

221

இருக்கிறது. கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள். பெரிய கடை வீதி வழியாகப் படி ஏறி வந்த யானை கட்டும் மண்டபம் சேருவது ஒன்று. மற்றொன்று கீழை வீதியில் இருந்து பிரியும் வழியாக வந்து சேருவது. இங்கிருந்து மேலேயுள்ள தாயுமானார் கோயில்வரை மண்டபம் போல் மேலே மூடிய படிக்கட்டு வரிசை உண்டு.

இந்தப் படிக்கட்டு மூலம் ஏறினால் முதலில் வாகன மண்டபத்தையும், அதன்பின் தருமபுரத்தாரது மௌன மடத்தையும் கடந்தே நூற்றுக்கால் மண்டபம் வந்து சேர வேணும். அங்குதான் உத்சவாதிகள் நிகழ்கின்றன. சமயச் சொற்பொழிவுகளும் சங்கீதக் கச்சேரிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனை எட்டி நின்று பார்த்து விட்டே.. படிக்கட்டுகள் ஏறலாம்; இதன் பின் சித்திர மண்டபம். இங்குள்ள சிற்பங்களோ, சித்திரங்களோ கலை அழகு நிரம்பியவை அல்ல. இதையும் கடந்த பின் தாயுமானார் கோயிலின் பிரதான வாயில்.

அந்த வாயிலில் மேற்கு நோக்கி நடந்தால் பல படிக்கட்டுகள் ஏறி, பல மண்டபங்கள் கடந்து இறைவனாம் தாயுமானாரையும் இறைவியாம் மட்டுவார் குழலியையும் தரிசிக்கலாம். கீழ்ப்பக்கத்து வாயில் வழியாக நடந்தால் அந்த வழி உச்சிப் பிள்ளையாரிடம் கொண்டு சேர்க்கும். இந்தச் சிராப்பள்ளி மலையின் அடிவாரத்தில் ஒரு பிள்ளையார், உச்சியில் ஒரு பிள்ளையார். இந்த உச்சிப் பிள்ளையாரை முதலில் வணங்கி விட்டே, அதன்பின் அவரது அன்னையையும் அத்தனையும் கண்டு தொழலாம். உச்சிப் பிள்ளையார் கோயில் மலை அடிவாரத்திலிருந்து 273 அடி உயரம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். அடித்தளத்திலிருந்து 417 படிகள் ஏறியே அங்கு வந்து சேரவேணும். இங்கிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, பொன்மலை, உறையூர் எல்லாவற்றையுமே ஒரு 'சர்வே' பண்ணலாம். இந்தப் பிள்ளையார்