பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வேங்கடம் முதல் குமரி வரை

ஏன் இவ்வளவு உயரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? அதற்கும் ஒரு கதை உண்டு.

தென்னிலங்கை மன்னனான விபீஷணன், ராமன் தந்த அரங்கநாதனை எடுத்து வந்திருக்கிறான். ராமனோ இலங்கை செல்லும்வரை ஓர் இடத்திலும் இந்த மூர்த்தியைக் கீழே வைத்து விடக்கூடாது என்று உத்தர விட்டிருக்கிறான். காவிரிக் கரைக்கு வந்ததும் விபீஷணனுக்கு நீராடும் ஆவல் பிறந்திருக்கிறது. அரங்கநாதனைக் கீழே வைக்க முடியாது தவித்திருக்கிறான். அச்சமயத்தில் பிள்ளையார் ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் அங்கு வந்திருக்கிறார். அவர் கையில் அரங்கனைக் கொடுத்துக் கீழே வைக்காமல் இருக்கச் சொல்லியிருக்கிறான், பிள்ளையாரோ குறும்புக்காரர். அவர் விபீஷணனிடம், 'உம்மை மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால் கீழே வைத்து விடுவேன்' என்று எச்சரித்திருக்கிறார்.

அப்படியே விபீஷணன் குளித்துக் கரையேறு வதற்குமுன் மூன்று முறை கூப்பிட்டிருக்கிறார். விபீஷணன் காதில் இவரது குரல் விழவில்லை. பிள்ளையார் அரங்கனைக் கீழே வைத்திருக்கிறார். விபீஷணன் எழுந்து பார்த்ததும் பிள்ளையார் ஓடியிருக்கிறார். விபீஷணன் துரத்தியிருக்கிறான். இவர் விழுந்தடித்து மலை மேலேயே ஏறி நின்றிருக்கிறார். துரத்தி வந்த விபீஷணனும் பிள்ளையார் தலையில் குட்டி இருத்தி இருக்கிறான். என்ன குட்டுப்பட்டால் என்ன? அரங்கனை இலங்கை செல்ல விடாமல் காவிரிக் கரையிலே இருத்திய பெருமையை அல்லவா தட்டிக் கொண்டு போய்விடுகிறார் இவர். அன்று மலையில் ஏறி அமர்ந்தவர்தான். பின்னர் இறங்கவே இல்லை, அர்ச்சகர் தயவிருந்தால் உச்சிப்பிள்ளையார் தலையில் குட்டுப்பட்ட வடுவையும் பார்க்கலாம். மாலை நேரமாகப் போனால் சந்நிதி திறந்திருக்கும். அவரைத் தரிசித்து விட்டே திரும்பலாம்.