பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

வேங்கடம் முதல் குமரி வரை

கம்பீரமான தோற்றமும் அவரது தலையில் கங்கை அடங்கி ஓடுங்கியிருப்பதும், அவரைச் சுற்றி தேவர்கள் எல்லாம் தொழுது நிற்பதும் கண் கொள்ளாக் காட்சி. பல்லவர்களது கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டு இந்தச் சிற்பவடிவம். இதனைக் காணும்போதே மலைமீதுள்ள திருவீதியில் தென் பக்க வாயிலுக்கு மேற்கே உள்ள குடைவரையும் ஞாபகம் வரும். அது அவ்வளவு சிறப்பானது அல்ல என்றாலும் அங்கு திரிமூர்த்திகள் மூவரும் உருவாகியிருக்கிறார்கள். இக்குடை வரையை மலையை விட்டு இறங்கி வீடு திரும்பும் போது அவகாசம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். லளிதாங்குரபல்லவேசுர கிருஹத்தை விட்டு இறங்கி வந்து மேற்கு நோக்கி விரைந்தால் பிரதானக் கோயிலுக்குள் நுழையலாம். இந்தக் கோயில் மலைமேல் நூற்று ஐம்பது அடி உயரத்துக்கு மேல் கற்களாலேயே சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்டிருக்கிறது. இது கி.பி. 10 முதல் 12-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது சரித்திர ஆராய்ச்சியாளரது அபிப்பிராயம். நமக்கு வியப்பெல்லாம் சரிவான மலையின்மீது செங்குத்தான சுவர்களை எப்படி எழுப்பி மண்டபங்கள் அமைத்தார்கள் என்பதுதான்.

பத்து வருஷங்களுக்கு முன் இந்துஸ்தான் கம்பெனியார் விமானம் கட்ட இரண்டு ஜெர்மன் எஞ்சினீயர்களை அமர்த்தியிருந்தார்கள். அவர்களைத் திருச்சி மலைக் கோட்டையில் ஏற்றி அங்கு கட்டப்பட்டுள்ள கோயிலைக் காட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த எஞ்சினீயர்களில் ஒருவரான ஸ்கிமிடிட் என்பவர், இப்படி மலைமேல் செங்குத்தாகச் சுவர் எழுப்பியிருப்பதைக் கண்டு மூக்கில் விரலை வைத்து அப்படியே அதிசயித்து நின்று விட்டார். இப்படியெல்லாம் கட்டடக் கலையில் வல்லவர்களுக்கு விமானத்தளம் கட்டுவதுதானா பிரமாதமான காரியம் என்பதே அவர் வாய்விட்டுச் சொன்ன அபிப்பிராயம்.