பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வேங்கடம் முதல் குமரி வரை

கட்டியிருக்கிறார்கள், கயிலையில் உள்ள உமை இத்தலத்தில் தாமரை மலர் ஒன்றில் பிறந்து காத்தியாயான முனிவரின் மகளாய் வளர்ந்து, மட்டுவார் குழலி என்ற பெயரோடு இறைவனை, ஆம்! தாயுமானவரைத்தான், திருமணம் செய்துகொள்கிறாள். அன்னையின் வடிவம் அழகியது. இவ்விருவரையும் தவிர மற்றக் கற்சிலைகளும் செப்புச் சிலைகளும் ஏராளமாக இருக்கின்றன, வேதாரண்யத்தில் பிறந்து இந்தக் கோயிலில் வந்து தங்கிய அந்தத் தவயோகி தாயுமானாருக்கும் ஒரு சிலை அமைத்து வைத்திருக்கிறார்கள்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். அப்பர் வந்திருக்கிறார். இருவரும் பாடியிருக்கிறார்கள் :-

நன்றுடை யானைத்
தீயதில்லானை, நரைவெள்ளேறு
ஒன்றுடை யானை
உமையொருபாகம் உடையானை
சென்றடையாத திருஉடை
யானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக்
கூறஎன் உள்ளம் குளிருமே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்பாடலை வைத்தே நன்றுடையான், தீயதில்லான் என்று இரண்டு தீர்த்தங்கள் வேறே அந்த வட்டாரத்தில் அமைத்திருக்கிறார்கள். தூர வரும்போதே சிறு பிள்ளையான சம்பந்தருக்கு, சிராப்பள்ளிமலை யானை போலத் தோன்றியிருக்க வேண்டும். அந்தத் தோற்றத்தில் பிறக்கிறது பாட்டு. சிராப்பள்ளிக் குன்றைச் சம்பந்தர் பாடினால், சிராப்பள்ளிச் செல்வரைப் பாடுகிறார் அப்பர்.

மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமாக உகந்து ஏறும் இறைவனார்