பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

வேங்கடம் முதல் குமரி வரை

நாற்றிசைகள் எங்கும்
நன்றாய் ஒளி பரப்பி
மேற்றிசைக்கு செல்லும்
வெய்யோன்

என்பது பாட்டு. ஆம்! காலை சூரிய உதயத்திலிருந்து மாலை அஸ்தமனம் வரை சூரியனின் கதியை அல்லவா பாடல் கூறுகிறது. நாமும்தான் சூரிய உதயத்துக்கு முன்னமேயே எழுந்திருக்கிறோம். அவன் வான வீதியில் உலா வரும்போது உடல் உழைத்துப் பணிபுரிகிறோம். அவன் மாலையில் மறைந்ததும் அயர்ந்து திரும்பவும் படுக்கைக்குச் செல்லுகிறோம். இதற்கிடையிலேதான் கோயில், குளம், பூசை, புனஸ்காரம் எல்லாம். ஆனால் இப்போது நான் உங்களை வேண்டுவது ஒருநாள் முழுவதும் கோயில் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கி வைக்க வேண்டும் என்று. வேண்டுமானால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கட்டும்.

வாரத்துக்கு ஒரு நாளாகிய ஞாயிற்றுக் கிழமைதான் எல்லாத் துறையில் உள்ளவர்களுக்கும் ஓய்வுண்டே. எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், திருச்சி மாவட்டத்திலே உள்ள மூன்று கோயில்களுக்குக் காலையில் ஒன்றுக்கும் மதியத்தில் ஒன்றுக்கும் மாலையில் ஒன்றுக்கும் சென்று அங்குள்ள சந்நிதிகளில் வழிபாடு செய்தால் பலனுண்டு என்று ஒரு நியதி இருக்கிறதே; அந்த நியதியையும் அந்த வட்டார மக்கள் ஒரு நல்ல பழமொழியாக அல்லவா சொல்கிறார்கள். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தித் திருவேங்கி நாதர்' என்பதுதான் பழமொழி. கடம்பர் இருப்பது குழித்தலையிலே, சொக்கர் இருப்பது சிவாய மலையிலே, திருவேங்கிநாதர் இருப்பது திருஈங்கோய் மலையிலே. இவற்றைக் கடம்பந்துறை, வாட்போக்கி, மரகதமலை என்றும் புராணங்கள் கூறும். இவை மூன்றையும் ஒரே நாளில் மக்கள் ஏன் வணங்க வேண்டும் என்பதற்குக் காரணமும் கூறுவர்.