பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வேங்கடம் முதல் குமரி வரை

நோக்கியிருந்தால், இறைவியாம் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கியே நிற்கிறாள். கோயிலுக்குள் நுழையுமுன், ஏன் இத்தலம் குழித்தலை என்றும் கடம்பந்துறை என்றும் பெயர் பெற்றது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? குளிர்ந்த சோலைகளையுடையதால் குழித்தண்டலை என்று பெயர் பெற்றிருக்கிறது. குழித்தண்டலையே குழித்தலை எனறு குறுகியிருக்கிறது. ஆதியில் இந்தப் பிரதேசம் கடம்பவனமாக இருந்திருக்கிறது. இன்றும் இக்கோயிலின் தல விருட்சம் கடம்ப மரமே. கடம்பவனத்திடையே அமர்ந்தவர் கடம்பவன நாதராகியிருக்கிறார். காவிரிக் கரையில் கட்டப்பட்ட கோயில் ஆனதினால் கடம்பந்துறை என்று பெயர் பெற்றிருக்கிறது. இத்தலத்துக்கு வந்த அப்பர்,

பூமென் கோதை உமை ஒரு பாகனை
ஓமம் செய்து உணர்மின்கள் உள்ளத்தால்;
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே.

என்று பாடியிருக்கிறார்.

இனி, கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில் அல்ல. கருவறையில் லிங்கத் திருவுருவுக்குப் பின்னே சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியிலேதான் இறைவியின் சந்நிதி. அம்மையின் சந்நிதிக்கு முன் பரமநாதர் வடிவம் இருக்கிறது. இவரே இத்தலத்தின் காவல் தெய்வம். ஆனால் இவரோ நாம் அவரை அணுகுமுன்பே வலக்கையை நேரே உயர்த்திச் சலாம்போடும் பாவனையில் நிற்கிறார். சலாம் போட்டுவிட்டே நடக்கலாம். இக்கோயிலில் இரண்டு சோமாஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜ மூர்த்திகள். இரண்டு நடராஜரில் ஒருவர் காலடியில் முயலகன் இருக்க மாட்டான். ஏதோ அயர்ந்து மறந்திருந்தபொழுது எழுந்து ஓடியிருப்பான் போலும்! இந்த நடராஜ வடிவம் பல