பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வேங்கடம் முதல் குமரி வரை

யில் கட்டாயம் அர்ச்சகர் இருப்பார். மற்ற வேளைகளில் சென்றால் ஆள் அனுப்பி அவரைத் தேடிப் பிடிக்கத்தான் வேணும். கோயில் பெரிய கோயில் அல்ல என்றாலும் சமீபத்தில் புதுப்பித்திருக்கிறார்கள். அகத்தியர் 'ஈ' உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் பெற்றிருக்கிறது என்று தலவரலாறு கூறும். ஆனால் மக்களோ இதனைத் திருவேங்கி மரகதமலை என்று தான் கூறுகிறார்கள். இதுதவிர இம்மலைக்கு மரகதமலை என்று வேறு பெயரும் உண்டு. இங்குள்ள இறைவன் மரகத அசல ஈசுவரர். அம்பிகையோ மரகதாம்பிகை. இங்கு இறைவன் இறைவி தவிரக் காண வேண்டியவர்கள் அதிகம் இல்லை. செப்புச் சிலைவடிவில் உள்ள சம்பந்தர் சோழர் காலத்தியவர். மற்றவர்கள் எல்லாம் பிற்காலத்தியவரே. இங்கு சமயக் குரவர் நால்வரும் வந்திருக்க வேணும். சம்பந்தர் மட்டும்தான் பதிகம் பாடியிருக்கிறார். மாணிக்கவாசகர் ஈங்கோய் மலையின் எழிலது காட்டுவதோடு திருப்தி அடைந்திருக்கிறார். சுந்தரர் வழக்கம்போல் கை நீட்டியிருக்கிறார். இறைவனும் அவருடன் விளையாட முதலில் புளியங் காயைத் கொடுத்துப் பின்னர் அதைப் பொன்னாக்கியிருக்கிறார். இந்த வரலாற்றை ஓர் அம்மானை கூறுகிறது.

சுந்தரர்க்கு புளியங்காய்
ஈந்தது காண் அம்மானை!
சுந்தரர்க்குப் புளியங்காய்
ஈந்ததுவே ஆமாயின்,
அத்தனையும் சொர்ணங்காண்
அம்மானை!

என்பது பாடல், நக்கீர தேவ நாயனார் ஈங்கோய்மலை எழுபது பாடியிருக்கிறார். அவரது அடியொற்றித் திருவாசகமணி ஈங்கோய் அந்தாதியே பாடியிருக்கிறார்.