பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வேங்கடம் முதல் குமரி வரை

உள்ள முக்கியமான சிவன் கோயில்களையெல்லாம் பார்த்துவிட்டோமே, இன்று சாரங்கபாணியைக் கண்டு தரிசிப்பதோடு அவன் சகாக்களான - சக்கரபாணி, கோதண்டபாணியையும் தரிசித்து விடலாம்.

கும்பகோணத்தின் பழம் பெயர் குடமூக்கு என்பதை முன்னரே தெரிந்து கொண்டோம். பிரம்மாவின் அமுதம் வந்து தங்கிய தலம் அல்லவா?, மேலும் இத்தலமே சூடடத்தின் மூக்கைப்போல் அமைந்திருக்கிறதாம். . அத்துடன் ஆயிரம் வாய்ப் பாம்பணையில் படுத்துக்கிடந்தவன் அல்லவா பரந்தாமன், அந்தப் பரந்தாமன் இந்தக் குடமூக்கைத் தேடி வந்திருக்கிறான் என்பார், முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்.

படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாய்க் கொண்டு

என்று பாடுகிறார் அவர். இவரோ கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்தவர் - மற்றைய ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்துக்கெல்லாம் முந்தியவர். அவர் இந்தப் பாம்பணையானைப் பாடியிருக்கிறார் என்றால் இவனும் பழம்பெருமை வாய்ந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ ஊருக்கு மத்தியில் நட்ட நடுவில் இவன் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறான், அமுதக் குடத்தால் அமைந்த கும்பேசுரர் கூட ஊருக்கு மேல் பக்கமாக ஒதுங்கி விடுகிறார், குடந்தைக் கீழ்க் கோட்டத்துக் கூத்தனும் காரோணத்தானும் கீழ்ப்பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சாரங்கபாணி எல்லோருக்கும் நடுநாயகமாக இருந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமா? இவரது கோயிலே மற்ற எல்லோருடைய கோயிலையும் விடப் பெரியது. கோபுரமும் அப்படியே, பதினோரு மாடத்தோடு