பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

247

தொலைவில் அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். இவரையே அபயப்பிரதான ரங்கநாதர் என்று அழைக்கிறார்கள். கோயிலின் மேலப் பிரகாரத்தில் சிலை உருவத்திலும் ரங்கநாதர் இருக்கிறார். கோயில் கட்டப் பூமியைத் தோண்டும்போது கிடைத்தவராம். பத்தடி நீளம் உள்ள கம்பீரமான வடிவம். இங்கு ஓர் இலந்தை மரம். இந்த மரத்தின்கனி பலவிதமான 'சைஸ்'களிலும் பலவிதமான சுவைகளிலும் கிடைக்கின்ற தென்கிறார்கள்.

இந்த ரங்கநாதரைத் தரிசித்து விட்டு, ஆம்பிரவதி ஆற்றைக் கடந்து தெற்கு நோக்கி இரண்டு மைல்கள் நடந்தோ வண்டியில் ஏறியோ சென்றால் தான்தோன்றிமலை வந்து சேருவோம். மலை தானாகத் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள கல்யாண வேங்கடரமணர், சிற்பிகளால் ஆக்கப்பட்டவர்தான். மலையையே குடைந்து அதில் பெருமானைச் செதுக்கியிருக்கிறார்கள். சுமார் எட்டடி உயரத்தில், இவர் இங்கே தனித்தே நிற்கிறார். அவர் மேல் மங்கைத் தாயார் இல்லை, 'அம்மையை விட்டுத் தனித்து வந்திருக்கும் இவர் எப்படிக் கல்யாண வேங்கடரமணர் என்று பெயர் பெற்றார்?' என்று தெரியவில்லை. இவருடைய உற்சவமூர்த்தம் கருவூர் ரங்கநாதர் கோவிலிலேயே இருக்கிறது. இந்தத் தான்தோன்றி மலையைத் தென் திருப்பதி என்கிறார்கள். அந்த வடமலைமேல் நிற்கும் மாதவனைக் காணும் வாய்ப்புப் பெறாதவர்கள் இந்தத் தென் திருப்பதி யானையாவது கண்டு தரிசித்தால் போதும்.

வேங்கடரமணனைத் தரிசித்த பின் கருவூருக்கு வந்து பின்னும் இரண்டு மைல் வடகிழக்காகக் கருவூர் சேலம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சென்றால் இடப்பக்கத்தில் சிறு பாறையும் அதன்மேல் ஒரு கோயிலும் தெரியும். இந்த மலையைத்தான் வெண்ணெய்மலை என்கிறார்கள். வெண்ணெய் போன்ற வெள்ளைக்கல் குன்று இது. இந்த மலையில் கோயில் கொண்டிருப்பவர் பால