பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

சுப்பிரமணியர். இவருடன் காசி விசுவநாதர், விசாலாக்ஷி, கருவூர்த் தேவர் எல்லாம் இருக்கின்றனர். இவர்களை யெல்லாம் வணங்கியபடி இறங்கி வரலாம். சந்நிதிக்கு எதிரில் ஒரு சிறு குளம் இருக்கிறது, அதற்கும் வடகிழக்கில் தேனு தீர்த்தம் இருக்கிறது. இது புராணப் பிரசித்தி பெற்றது. பிரமனுக்குத் தான் இல்லாவிட்டால் படைப்புத் தொழிலே நடக்காது என்ற கர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதை அடக்க இறைவன் அந்த வேலையினின்று பிரமனை விலக்கிவிட்டுக் காமதேனுவையே 'அப்பாயிண்ட்' பண்ணியிருக்கிறார், காமதேனுவும் அப்படியே உயிர்களனைத்தையும் படைத்து விட்டு அந்த உயிர்களுக்கு உணவாக வெண்ணெயையே மலையாகப் படைத்திருக்கிறது. காம தேனுவுக்கு வேறு உணவு சமைக்கத் தெரியாது போய்விட்டது போலும்! அந்த வெண்ணெய் உண்டே உயிர்கள் எல்லாம் வாழ்ந்திருக்கின்றன. வெண்ணெய் உண்டவர்கள் விக்கிக்கொள்ளாமல் இருக்கக் காமதேனுவே தேனாக ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கியிருக்கிறது. இத்தனை விவரங்களையும் சொல்கிறது ஒரு பாட்டு.

பூத்திட உதித்த சராசரம் அனைத்தும்
பொசித்திட உள்ளிடை தெரிந்து
நீத்தவார் சடில நிருமலன் உறையும்
நீள் திருக்கோயில் உத்திரத்தில்
மீத்திகழ் அமுதம் தான் எனத் திரண்ட
வெண்ணெய் மால்வரை எனவிதித்துத்
தீர்த்தம் ஒன்று அதன் கீழ்பால் வகுத்து
அத் தீர்த்தமும் தேனுமாதீர்த்தம்

நாமும் வெண்ணெயையும் தேனையும் நினைத்துச் சப்புக் கொட்டிக்கொண்டே திரும்பலாம். இன்னும் அவகாசத்தோடு கரூர் செல்கிறவர்கள், பக்கத்திலுள்ள நெரூர் சென்று அங்குள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்கும் வணக்கம் செலுத்திவிட்டு வரலாம்.