பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

251



சீர் கறை ஊரில் பாண்டிக் கொடிமுடி
நற்றவா! உன்னை நான் பறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே.

என்பது சுந்தரர் பாட்டு. நல்லூர்ப் பெருமணத்தில் சோதியில் கலக்கும்போது ஞானசம்பந்தர் நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தம்மைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தபோது நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார் திருநாவுக்கரசர். ஆனால் சுந்தரரோ, காவிரிக் கரையிலுள்ள பாண்டிக் கொடுமுடிக் கோயிலுக்கு வந்து இங்கு இறைவனை வணங்கித் தொழும்போதே நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார். இப்படிச் சுந்தரர் வாக்கால் நமச்சிவாயத்தைக் கேட்கும் பேறு கிடைக்கிறது. நமக்குப் பாண்டிக் கொடுமுடியை நினைத்தால், அந்த கொடுமுடி என்ற தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கொடுமுடி திருச்சிக்கு மேற்கே 62 மைல் தூரத்தில் இருக்கிறது. இத்தலம் செல்லத் திருச்சி ஈரோடு லயனில் உள்ள கொடுமுடி ஸ்டேஷனில் இறங்கவேணும். சென்னையிலிருந்து கோவை செல்லும் ரயிலில் வந்து ஈரோட்டில் வண்டி மாற்றி 23 மைல் தென்கிழக்கே வந்தாலும் இத்தலம் வந்து சேரலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நாலு பர்லாங்கு தொலையில் கோயில் இருக்கிறது. கோயில் காவிரியின் மேல்கரையில் இருக்கிறது. தெற்கு நோக்கி வந்த காவிரி இங்குதான் கிழக்கு நோக்கித் திரும்புகிறது.

அகண்ட காவிரியாகவே இங்கு ஆறு இருக்கும், அதிலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஆறு நிறைந்து போகும் போது மிக அழகாக இருக்கும். இப்படிக் காவிரி கரைபுரண்டு போவதைக் கண்டுதானே மாணிக்கவாசகர், 'அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டிவெள்ளமே!' என்று இறைவனைக் கூவி அழைத்திருக்கிறார். அகத்தியர் கமண்டலத்தில் கொண்டுவந்த கங்கையை இங்குள்ள