பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

253

இறைவிக்கு என்பதோடு திருமாலுக்குமே ஒரு சந்நிதி. ஒவ்வொருசந்நிதியையும் ஒவ்வொரு கோபுரம் அழகு செய்கிறது. வடபக்கம் கொடுமுடிநாதர் கோயில், இவரையே மகுடேசர், மலைக்கொழுந்தர் என்றெல்லாம் அழைக்கிறார்கள், தேவியோ வடிவுடையநாயகி, பண்மொழி அம்மை. இவளோ தென்பக்கத்துக் கோயிலில் இருக்கிறாள். இருவருக்கும் இடையே தனிக் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கியவராய் அறிதுயிலில் இருக்கிறார். இவர் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்? பிரமனும் விஷ்ணுவும் மகுடேசுவரரைத் தரிசிக்க வந்தவர்கள். இவர்களில் பிரம்மா மேலப் பிரகாரத்தில் வன்னி மரத்தடியில் தங்கியிருக்கிறார். தரிசனம் கிடைப்பதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது போலும்! அந்த நேரத்தில் அயர்ந்து படுத்திருக்க வேணும் இந்த வீரநாராயணர். மைத்துனர் துயிலைக் கலைக்க வேண்டாம் என்று கொடுமுடிநாதர் எண்ணி விட்டார் போலும்!

இதனாலே இக்கோயிலை உத்தமர் கோயிலைப்போல் திரிமூர்த்திகள் கோயில் என்றே கூறுகின்றனர். பெருமாள் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவர் துணைவி மகாலக்ஷ்மியுமே வந்திருக்கிறாள். எப்போதும் காலடியில் இருப்பவள் இங்கு தனிக்கோயிலில் பெருமாளுக்குத் தென்புறம் தலைமாட்டிலேயே உட்கார்ந்திருக்கிறாள். இவர்களையெல்லாம் சென்று கண்டு வணங்கி எழலாம். வெளிப் பிரகாரத்தைச் சுற்றினால் அங்கு தலவிருட்சமான வன்னி. அங்கே ஒரே பீடம், அதில் பிரம்மா எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் தெற்கே கோயிலின் வடமேற்கு மூலையில் அனுமாருக்கு என்று ஒரு கோயில். அங்கு பெரியதொரு சிலை வடிவில் ஆஞ்ச நேயர். ஊசி நுழைய இடம் கொடுத்தால் ஓட்டகத்தையே நுழைப்பவர் போல், இந்தப் பெருமாளுக்கு இடம் கொடுக்க அவர் தம் சிறிய திருவடியையுமே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.