பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28. நாமக்கல் நரசிம்மர்

கோவையில் ஒரு பரம பக்தர், புகழ்மிக்க பி. எஸ். ஜி. குடும்பத்தினரில் ஒருவர். கிட்டத்தட்ட எண்பது வயது நிரம்பியவர். வேங்கடசாமி நாயுடு என்ற பெயர் உடையவர். அவர் தம் நெற்றி முழுவதிலும் நாமம் போட்டுக் கொள்பவர். நெற்றி நிறைய நீறு பூசுவது அல்லது நாமம் போட்டுக் கொள்வது எல்லாம் நாகரிகம் அல்ல என்று கருதும் இந்த நாளிலும் இப்படி நாமம் போட்டுக் கொண்டு வெளி வருவது என்றால் அதற்கு எவ்வளவோ துணிவு வேண்டும். துணிவைவிட அழுத்தமான பக்தி வேண்டும். இவரை ஓர் இளைஞன் அணுகிக் கொஞ்சம் ஏகத்தாளமாக, 'தாத்தா, இதைவிடக் கொஞ்சம் பெரிய நாமமாகப் போட்டுக் கொள்ளக் கூடாதா?' என்று கேட்டபோது, அவர் 'அப்பனே! இதைவிட அகலமாகப் பெரிதாக நாமம் இட்டுக்கொள்ள என் நெற்றியில் இடம் இல்லையே?' என்றாராம். அந்தப் பெரியவர் போன்றவர்கள், பெருமாளின் திருவடிகளைத் தங்கள் தலையிலே நாம வடிவிலே தாங்குவதில் எல்லையற்ற இன்பம் பெறுகின்றவர்கள்.