பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

259

சேலம் நகரத்துக்குக் கிழக்கே உள்ள மலைமேலே ஒரு நாமம் பளிச்சென்று தெரியும்படி போட்டிருக்கும். ஒருவரிடம் ஒரு காரியத்தை எதிர்பார்த்து அந்தக் காரியம் நடவாமல், எதிர்பார்த்ததிற்கு நேர்மாறாக நடந்துவிட்டால், ஏமாந்தவரிடம் மக்கள் காட்டுவது இந்த மலைமேல் இடப்பட்டிருக்கும் நாமத்தையே என்கிறார்கள் சேலத்து மக்கள், நாமம் போடுவது என்றால் ஏமாற்றுவது என்று பொருள் எப்படியோ ஏற்பட்டு விட்டது. அப்படி ஏமாற்றுச் கச்சவடம் ஒன்றும் செய்யாமலேயே ஒரு தலம் நாமக்கல் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அங்குள்ள மலைமீதும் பெரிய நாமம் ஒன்றையும் காணோம். நா என்றால் நாம் செய்யும் பாபங்களை யெல்லாம் நாசம் செய்யக் கூடியது. ம என்றால் மங்களத்தைக் கொடுக்கக் கூடியது என்று பொருள். இப்படிப் பாபத்தைப் போக்கி, மங்களத்தைத் தரும் பகவானின் நாமம் விளங்கும்படி உயர்ந்திருக்கும் மலையே நாமக்கல் ஆகும். இந்த நாமக்கல் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

நாமக்கல் சேலம் ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய ஊர். சேலம் நகரத்துக்கு நேர் தெற்கே இருபத்தொரு மைல் தொலைவில் இருக்கிறது. இந்தத் தலத்துக்குச் செல்ல ரயில் வசதி கிடையாது. சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். போகிற வழியில் பொய்மான் கரடையுமே பார்க்கலாம். ஊரையடுக்கும்போது நாமக்கல் மலையும் அதன் மீது ஒரு கோட்டை கட்டியிருப்பதும் தெரியும். இத்தலத்தை மகா விஷ்ணு முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் கோட்டைவிட்ட இவர் இங்கு மலைக் கோட்டையையே கைப்பற்றி மூன்று திருக்கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மலையின் மேல்புறம் நரசிம்மராகவும், மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைமேல் கோட்டை உள் வரதராகவும் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். இப்படி மூன்று மூர்த்தங்களில் இவர் இருந்தாலும் பிராதான்யம்